ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் புகழ்பெற்ற ஆம்பர் கோட்டையைச் சுற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்ந்து வந்த யானைகளையும், அவற்றின் பாகன்களையும் ஒருங்கிணைத்து, அம்மாநில அரசு ஒரு முறையான வாழ்விடத்தை உருவாக்கியுள்ளது. அதுவே ஜெய்ப்பூரின் புகழ்பெற்ற 'ஹாதி கான்' (யானைகள் கிராமம்) ஆகும்.
தற்போதைய நிலவரப்படி, இங்கு சுமார் 80 யானைகள் மிகச்சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு யானைக்கும் அதன் பாகனுக்கும் தனித்தனியான இருப்பிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, யானைகள் உற்சாகமாகக் குளித்து மகிழ ஒரு பெரிய செயற்கைக் குளமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
இது ஒரு உயிரியல் பூங்கா அல்ல; மாறாக, யானைகள் தங்கள் பாகன் குடும்பங்களுடன் இயல்பாக வாழும் ஒரு கிராமம். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் யானைகளுடன் நெருக்கமாகப் பழகவும், அவற்றின் அன்றாட வாழ்க்கை முறையை நேரில் காணவும் முடியும். யானைகளுக்கு உணவளித்தல், அவற்றைக் குளிப்பாட்டுதல் மற்றும் யானைச் சவாரி செய்தல் போன்றவற்றுக்குத் தனித்தனிக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த யானைகள் கிராமம், முதலில் ஜெய்ப்பூர் மேம்பாட்டு ஆணையத்தால் நிர்வகிக்கப்பட்டு, பின் வனத்துறையின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்டது. இருப்பினும், இங்குள்ள யானைகள் அந்தந்தப் பாகன் குடும்பங்களுக்கே சொந்தமானவை. அரசு அவர்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளையும் பாதுகாப்பான இடத்தையும் மட்டுமே வழங்கியுள்ளது.
காலை 9:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை திறந்திருக்கும் இந்த கிராமத்தில், யானைகளின் உடல் மீது குழந்தைகள் வண்ணங்களால் ஓவியம் வரையும் காட்சி காண்போரைக் கொள்ளை கொள்ளும். கம்பீரமான யானையின் உடல், ஒரு பிரம்மாண்டமான ஓவியத் திரையாக மாறும் அந்தத் தருணம் வியப்பிற்குரியது. குழந்தைகளின் மழலைச் சிரிப்பிற்கு மத்தியில், அந்தப் பேருயிர் காட்டும் பொறுமை ஒரு உன்னதமான பாடம்.
நவீன உலகில் செல்போன் திரைகளிலேயே மூழ்கிக் கிடக்கும் குழந்தைகளுக்கு, இத்தகைய பேருயிருடன் தொட்டுப் பழகி வண்ணம் தீட்டும் அனுபவம் ஒரு வரப்பிரசாதமாகும். யானையின் கறுத்த மேனியில் குழந்தைகள் தீட்டும் வண்ணங்கள், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான ஆழமான அன்பைப் பறைசாற்றுகின்றன. இது வெறும் ஓவியம் மட்டுமல்ல; இயற்கையை எப்படிக் கொண்டாட வேண்டும் என்பதற்கான வாழ்வியல் பாடம்!