Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/சிந்தனைக் களம்/ மகாத்மா காந்திக்கு பிறகு மக்களின் மனங்களை வென்றவர் பிரதமர் நரேந்திர மோடி!

மகாத்மா காந்திக்கு பிறகு மக்களின் மனங்களை வென்றவர் பிரதமர் நரேந்திர மோடி!

மகாத்மா காந்திக்கு பிறகு மக்களின் மனங்களை வென்றவர் பிரதமர் நரேந்திர மோடி!

மகாத்மா காந்திக்கு பிறகு மக்களின் மனங்களை வென்றவர் பிரதமர் நரேந்திர மோடி!

PUBLISHED ON : செப் 25, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
பிரதமர் நரேந்திர மோடி. இந்தப் பெயர் இப்போது இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் உச்சரிக்கும் பெயராக மாறியிருக்கிறது. வளர்ந்த நாடுகளின் தலைவர்களும் அவரைச் சந்திக்க போட்டி போடுகின்றனர்.

தலைவர்களுடன் என்னதான் நெருங்கிய நட்பிருந்தாலும், இந்திய மக்களின் நலனை விட்டுக் கொடுக்காத, இந்தியாவுக்கு எது நன்மை தருமோ, அதை மட்டுமே செய்யும் மோடியின் உறுதி உலகை வியக்க வைத்திருக்கிறது. நாட்டின் நிர்வாகமாக இருந்தாலும், தேர்தல் களமாக இருந்தாலும் மோடியின் வியூகம், உழைப்புக்கு முன்னால் யாராலும் நிற்க முடியவில்லை.

எதிரிகளின் அவதுாறுகளும், துாற்றல்களும் தான் எனக்கு உணவு என கூறும் மோடி, சுதந்திர நுாற்றாண்டான 2047ல், இந்தியாவை உலகின் முதல் பொருளாதார நாடாக்கும் இலக்குடன் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ்., பிரசாரக்காரராக, அதாவது முழுநேர ஊழியராக தன் பொதுவாழ்வை துவங்கிய மோடி, அமைப்பை அடித்தட்டு மக்களிடம் கொண்டுச் செல்வதில் தேர்ந்தவராக இருந்தார்.

பக்குவம் ஆர்.எஸ்.எஸ்ஸை நிறுவிய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார், 'தன்னைப் போல வேலை செய்யும் ஊழியர்களை உருவாக்குவதே ஒரு பிரச்சாரக்கின் பணி' என்றார். அதை வேத வாக்காக ஏற்று, தனக்கு கொடுக்கப்பட்ட அனைத்து பொறுப்புகளிலும், அனைத்து இடங்களிலும் காரியகர்த்தர்களை உருவாக்கினார் மோடி.

சமூக, பொருளாதார ரீதியாக மிகமிக பின்தங்கிய சூழலில் இருந்து வந்தவர் மோடி. சிறு வயதில் வறுமையை எதிர் கொண்டவர்.

அமைப்பு பணிகளில் அசாத்திய திறமை, மக்களைக் கவரும் பேச்சு, செயல்பாடுகளில் துாய்மை, உடன் பணியாற்றும் நிர்வாகிகளை அனுசரித்துச் செல்லும் பக்குவம், கட்சி தொண்டர்களில், திறமையானவர்களை அடையாளம் கண்டு தகுந்த வாய்ப்பளிப்பது என, அரசியல்வாதிகளுக்கு இருக்க வேண்டிய அனைத்து குணங்களை கொண்டவர் பிரதமர் நரேந்திர மோடி. அவரது வெற்றி ரகசியம் இதுதான் என நினைக்கிறேன்.

பா.ஜ., மகளிரணி தேசிய தலைவரான பின், கட்சியின், 'மத்திய தேர்தல் கமிட்டி' கூட்டங்களில் பங்கேற்கும் பெரும் வாய்ப்பு எனக்கு கிடைத்து வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலின்போது, வேட்பாளர்களை இறுதி செய்ய, மாநில வாரியாக நடந்த கூட்டங்களில் நானும் கலந்து கொண்டேன்.

பெரும்பாலும் இரவு 10:00 மணிக்கு மேல் துவங்கி விடியற்காலை மூன்று, நான்கு மணி வரை இந்தக் கூட்டங்கள் நீளும்.

ஒவ்வொரு கூட்டத்திலும் துவக்கத்திலிருந்து, முடியும் வரை முழுமையாக பங்கேற்பார் பிரதமர் மோடி. ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர் பெயரை, சம்பந்தப்பட்ட மாநிலத் தலைவரோ, அமைப்பு பொதுச்செயலரோ வாசிக்கும்போது குறுக்கிட்டு தன் கருத்துகளை தெரிவிப்பார்.

'இப்போது எம்.பி.,யாக இருப்பவரை ஏன் தேர்வு செய்யவில்லை?' எனக் கேட்டு, அத்தொகுதியில் வேறு சிலரின் பெயர்களைச் சொல்லி, 'அவர்கள் என்ன செய்கின்றனர்?' என்று கேட்பார்.

பிரதமர் மோடி ஒரு வார்த்தை சொல்லி விட்டால், அதற்கு மாற்றுக் கருத்து யாரும் தெரிவிக்கப் போவதில்லை.

ஆனாலும், தனக்கு தெரிந்தவர் வேட்பாளராக இருந்தாலும், அது ஜனநாயக வழியில் நடக்க வேண்டும் என்பதில் மிகமிக உறுதியாக இருந்தார். இதை நேரில் கண்டு வியந்து போனேன்.

கட்சி தொடர்பான கூட்டங்களையும் தன் இல்லத்திலேயே அவர் நடத்தலாம். ஆனால், கட்சி விஷயங்கள் என்றால் கட்சி அலுவலகம் வந்து விடுவார். எந்த வேலையை எடுக்கிறாரோ அந்த வேலையை வெற்றிகரமாக செய்து முடிக்காமல் அவர் ஓய்வெடுப்பதில்லை. தனிப்பட்டு செயல்படாமல், கட்சி நிர்வாகிகளுடன் இணைந் தே செயல்படுவார்.

'என் கடன் பணி செய்து கிடப்பதே' என, கட்சித் தலைமை என்ன கட்டளையிட்டதோ, அதை எந்த அளவுக்கு சிறப்பாக செய்ய முடியுமோ அந்த அளவுக்கு சிறப்பாக செய்து வருபவர் மோடி. எந்த பதவிக்கும் அவர் ஆசைப்பட்டதில்லை.

கடந்த, 2001ல் குஜராத் முதல்வரானது கூட, எதிர்பாராமல் நடந்ததுதான். ஆனாலும், கிடைத்த வாய்ப்பை பற்றிக் கொண்டு அடுத்தடுத்து முன்னேறினார்.

முதல்வரான பின், மோடிக்கு ஏற்பட்டது போன்ற நெருக்கடி வேறு யாருக்கு வந்திருந்தாலும் அரசியலை விட்டே சென்றிருப்பர்; ஆனால், சோதனைகளையே, சாதனைகளாக்கி முதல்வர், பிரதமர் பதவியில், நீடித்து வருகிறார்.

எந்த குடும்பப் பின்னணியும் இல்லாமல், தொடர்ந்து மூன்றுமுறை மக்களவைத் தேர்தலில் வென்று, நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்துள்ளார் மோடி.

தொடர்ச்சியாக அதிக நாட்கள் பிரதமராக இருந்தவர்களில் இந்திரா காந்தியை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இது இந்திய அரசியலில் யாரும் நிகழ்த்தாத சாதனை.

மோடியின் சாதனையாக நான் கருதுவது, உலக அரங்கில் இந்தியாவுக்கு அவர் ஏற்படுத்தி தந்திருக்கும் பெரும் அங்கீகாரம்; கவுரவம். மோடி பிரதமராவதற்கு முன்பும், பின்பும் அடிக்கடி வெளிநாடு செல்பவர்கள் இந்த வித்தியாசத்தை உணர்ந்திருப்பர்.

முன்பெல்லாம் வெளிநாட்டு விமான நிலையங்களில், இந்தியர் என்றதும் பல வித சோதனைகள், நெருக்கடிகள் இருக்கும். இப்போது இந்தியர் என்றதும் தனி மரியாதை கிடைக்கிறது என்று, என்னை சந்திக்கும் பலர் பெருமிதத்துடன் தெரிவிக்கின்றனர்.

இந்தியா என்பது, 140 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட நாடு. பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டாலோ, உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டாலோ நிலைமை மோசமாகி விடும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் தொழில்துறையில் குறிப்பாக உற்பத்தி துறையில் இந்தியா பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது.

உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு அடைந்ததால்தான் கொரோனா நெருக்கடியின்போது யாரையும் சார்ந்திராமல் மீள முடிந்தது. இதற்கெல்லாம் பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டங்களே காரணம்.

அதி விரைவுச் சாலைகள், மெட்ரோ ரயில்கள், புதிய ரயில் பாதைகள், வந்தே பாரத், தேஜஸ் போன்ற அதிவிரைவு ரயில்கள், புதிய விமான நிலையங்கள், துறைமுகங்கள், எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள்.

கிராமச் சாலைகள் என மோடி அரசு ஏற்படுத்தியுள்ள உள்கட்டமைப்பு வசதிகளை வளர்ந்த நாடுகளே வியப்புடன் பார்க்கின்றன.

இதனால்தான், இந்தியாவின் பொருளாதாரம் உலக அளவில் நான்காவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. மோடி ஆட்சியில் உலகிலேயே அதிக மருத்துவர்களை உருவாக்கும் நாடாக இந்தியா மாறியுள்ளது.

மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால்தான் இந்தியா வளர்ச்சி அடையும் என்பதை அடிக்கடி வலியுறுத்துபவர் மோடி. ஒரு மாநிலம் வளர்ச்சியில் தேங்கினாலும் தேசத்தின் வளர்ச்சி பின்தங்கி விடும் என்பதே அவரது பார்வை.

அதனால்தான் நாட்டின் முக்கியமான பதவிகளில்கூட அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார். பிரதமர் மோடியின் இந்த 'தேசியப் பார்வை' தான் நம் தாய் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவராக்கியுள்ளது.

தனி கவனம் பொதுவாக அரசியல் தலைவர்கள், தங்களுக்கு தேர்தல் வெற்றி கிடைக்கும் மாநிலத்தின் மொழி, கலாசாரத்தை அதிகமாக புகழ்வார்கள். ஆனால், தான் வென்ற மூன்று மக்களவைத் தேர்தலிலும் தமிழகத்தில் இருந்து தேர்தல் வெற்றி கிடைக்காவிட்டாலும், தமிழ் மொழி, கலாசாரத்தை உலக அரங்குகளில் உயர்த்தி பேசி வருபவர் பிரதமர் மோடி.

'உலகின் தொன்மையான மொழி தமிழ்' என்று உலக அரங்குகளில் முழங்கிய ஒரே பிரதமர் மோடி மட்டுமே. திருக்குறளை உலக மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவதில் அவர் காட்டும் தனி கவனம் ஆச்சரியமளிக்கிறது.

எளிய மக்களின் உணர்வுகளை, அவர்களின் தேவையை அறிந்தவர். மகாத்மா காந்திக்குப் பின் இந்திய மக்களின் மனங்களை வென்றவர் மோடி. அதனால்தான் அரசியலில் தொடர் வெற்றிகளை அவரால் குவிக்க முடிகிறது. ஒருவர் தான் போட்டியிட்ட தேர்தலில் தோல்வியே காணாமல், வென்றதை சாதனையாக கொண்டாடுகிறார்கள்.

ஆனால், தனது தலைமையில் சந்தித்த மூன்று சட்டசபைத் தேர்தல், மூன்று லோக்சபா தேர்தல் என ஆறு தேர்தல்களில் வெற்றியை ஈட்டியவர் இந்திய அரசியலில் மோடி மட்டுமே.

தங்களை வழிநடத்த, 140 கோடி இந்தியர்கள் கண்டெடுத்த நல்முத்து, மோடி. மகாத்மா காந்தி பிறந்த குஜராத் மண் கொடுத்த சொத்து. அவரது திறமையும், உழைப்பும் இந்தியாவின் வளர்ச்சியை வேகப்படுத்திக் கொண்டிருக்கிறது.

- வானதி சீனிவாசன் -

பா.ஜ., - எம்.எல்.ஏ.,





      Our Apps Available On




      Dinamalar

      Follow us