Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/தலையங்கம்/ உயிர் காக்கும் மருந்துகள் தரமாக இருப்பது அவசியம்!

உயிர் காக்கும் மருந்துகள் தரமாக இருப்பது அவசியம்!

உயிர் காக்கும் மருந்துகள் தரமாக இருப்பது அவசியம்!

உயிர் காக்கும் மருந்துகள் தரமாக இருப்பது அவசியம்!

PUBLISHED ON : அக் 13, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
மத்திய பிரதேச மாநிலத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், சளி மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த, 20க்கும் மேற்பட்ட குழந்தைகள், சிறுநீரக செயலிழப்பு காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்ததும், ராஜஸ்தான் மாநிலத்தின் சிகார் மாவட்டத்தில், இதேபோல மூன்று குழந்தைகள் பலியானதும், நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அத்துடன், இறந்த குழந்தைகளின் சிறுநீரகத்தில் இருந்த திசுக்களை பரிசோதனைக்கு உட்படுத்தியதில், 'கோல்ட்ரிப், நெக்ஸ்ட்ரா' என்ற இருமல் மருந்துகளை குடித்ததே குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணம் என, தெரியவந்தது.

குழந்தைகள் உயிரிழக்க காரணமாக இருந்த இரண்டு இருமல் மருந்துகளில் ஒன்றான, 'கோல்ட்ரிப்' மருந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த, 'ஸ்ரீசன் பார்மா' என்ற நிறுவனத்தில் தயாரானதும், 'நெக்ஸ்ட்ரா' மருந்து குஜராத் மாநிலத்தில் உள்ள நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஸ்ரீசன் நிறுவனத்தின் உரிமையாளர், ம.பி., மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இருமல் மருந்தை தயாரித்த நிறுவனங்களின் கவனக்குறைவும், அந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை பரிசோதித்து தரத்தை உறுதி செய்ய வேண்டிய, தமிழக உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பினரின் மெத்தனமுமே, பல குழந்தைகள் உயிரிழக்க காரணமாகியுள்ளது. கோல்ட்ரிப் மருந்தை தயாரித்த, ஸ்ரீசன் பார்மா நிறுவனம், 2011ல் உரிமம் பெற்று செயல்பட்டு வந்துள்ளது.

ஆனாலும், குறைவான உள்கட்டமைப்பு வசதிகளுடன், தேசிய மருந்து பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த அந்த நிறுவனத்தை, தமிழக அரசில் உள்ள சம்பந்தப்பட்ட துறையினர் கண்டு கொள்ளாமல் இருந்து உள்ளனர்.

அது மட்டுமின்றி, 'தமிழகத்தில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் முறையாக சோதனை நடக்கவில்லை' என, சி.ஏ.ஜி., எனப்படும், இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் தன் அறிக்கையில் எச்சரித்தும், அதை தமிழக அரசு கண்டு கொள்ளாமல் இருந்ததும் வியப்பாக உள்ளது.

நம் நாட்டில், தமிழகம் மற்றும் குஜராத் மாநிலங்களில் தான் அதிக அளவில் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் தயாரிக்கப்படும் மருந்துகள், பல மாநிலங்களுக்கு மட்டுமின்றி, பல நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன.

கடந்த, 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில், இதுபோன்ற கலப்பட இருமல் மருந்துகளை குடித்த, 12 குழந்தைகள் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இறந்தன.

அதுமட்டுமின்றி, சில வெளிநாடுகளிலும், இருமல் மருந்துகளை குடித்த குழந்தைகள் உயிரிழந்தன. இதையடுத்து, உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தும், அது நம் நாட்டில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது வருத்தத்திற்கு உரியது.

கொரோனா தொற்று விஸ்வரூபம் எடுத்து, 2020 - 21ம் ஆண்டுகளில், உலக நாடுகளில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்திய போது, இந்திய மருந்து நிறுவனங்கள் தான், தடுப்பூசிகளை தயாரித்து, வெளிநாடுகளுக்கு வழங்கின.

அது, மத்திய அரசுக்கும், நம் நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பெருமை தருவதாக அமைந்தது. அந்த பெருமையை சீர்குலைக்கும் வகையில், சமீபத்திய குழந்தைகள் இறப்புகள் நிகழ்ந்துள்ளன.

மேலும், நம் நாட்டில் செயல்படும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் பல, முறைப்படி பதிவு செய்யாமலும், உரிமம் பெறாமலும் இயங்குவதாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தில், சம்பந்தப்பட்ட துறையினர் இனியாவது உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும். உரிமம் பெறாமல், உரிய பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல் செயல்படும் மருந்து நிறுவனங்களை இழுத்து மூட வேண்டும்.

அதுமட்டுமின்றி, மத்திய - மாநில மருந்து கட்டுப்பாட்டு பிரிவினர், மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் அடிக்கடி சோதனை செய்து, அவற்றின் தயாரிப்பின் தரத்தை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும்.

உயிர்களை காக்கும், நோய்களை தீர்க்கும் மருந்துகள் தயாரிப்பில் எந்த நிலையிலும் குளறுபடிகள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது, மத்திய - மாநில அரசுகளின் பொறுப்பாகும். அதை மீறுவோரை தண்டிக்கவும் தயங்கக் கூடாது. அதற்கேற்ற வகையில், விதிகளை கடுமையாக்கினாலும் நல்லதே.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us