Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/தலையங்கம்/ ஊழியர்களுக்கு சாதகமான புதிய தொழிலாளர் சட்டங்கள்

 ஊழியர்களுக்கு சாதகமான புதிய தொழிலாளர் சட்டங்கள்

 ஊழியர்களுக்கு சாதகமான புதிய தொழிலாளர் சட்டங்கள்

 ஊழியர்களுக்கு சாதகமான புதிய தொழிலாளர் சட்டங்கள்

PUBLISHED ON : டிச 01, 2025 03:27 AM


Google News
Latest Tamil News
நம் நாட்டில் பல ஆண்டுகளாக, மிக பழமையான தொழிலாளர் சட்டங்களே அமலில் இருந்தன. தற்போதைய தொழில் சூழல்களுக்கு ஏற்ற வகையில், தொழிலாளர் சட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த 21ம் தேதி நாடு முழுதும் புதிய தொழிலாளர் சட்டங்களை, மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதன் வாயிலாக, 29 தொழிலாளர் சட்டங்கள் சுருக்கப்பட்டு, 'தொழிலாளர் ஊதிய சட்டம் 2019, தொழில்துறை தொடர்புகள் சட்டம் 2020, சமூக பாதுகாப்பு சட்டம் 2020, தொழில்முறை பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிட சூழல் சட்டம் 2020' என, நான்கு சட்டங்களாக நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த புதிய சட்டங்களில், 'அனைத்து ஊழியர்களுக்கும் கட்டாயமாக நியமன ஆணை வழங்க வேண்டும்; 10 பேருக்கு குறைவாக வேலை செய்யும் நிறுவனங்களுக்கும் ஈ.எஸ்.ஐ., வழங்கி, அதிக அளவிலான தொழிலாளர்களை காப்பீட்டின் கீழ் கொண்டு வர வேண்டும்; ஓராண்டில், 30 நாட்கள் மட்டுமே வேலை செய்திருந்தாலும், போனஸ் பெறும் உரிமை, 40 பேருக்கு மேல் பணியாற்றும் தொழிற்சாலைகளில் ஆண்டுதோறும் மருத்துவ பரிசோதனை; அனைத்து ஊழியர்களுக்கும் சரியான நேரத்தில் சம்பளம்' என்பது போன்ற விதிமுறைகள் இடம் பெற்றுள்ளன.

அத்துடன், ஓராண்டு பணி முடித்தாலே பணிக்கொடை எனப்படும், 'கிராஜுவிட்டி' பெறும் உரிமை, நாடு தழுவிய அளவில் ஒரே மாதிரியான குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த மாற்றங்கள் எல்லாம், தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உயர்த்துவதுடன், தொழில் வளர்ச்சி, வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க உதவும் என நம்பப்படுகிறது.

மேலும், பெண் தொழிலாளர்கள் பங்களிப்பை அதிகரிக்கவும், அமைப்புசாரா துறையில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களுக்கு, அனைத்து ஊதிய பலன்களும் கிடைக்கக்கூடிய வகையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இருந்தாலும், 'புதிய தொழிலாளர் சட்டங்களில் இடம் பெற்றுள்ள சில விதிமுறைகள், தொழில் நிறுவனங்கள் ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவது மட்டும் இல்லாமல், வேலையில் இருந்து நீக்குவதையும் எளிமையாக்கி இருக்கின்றன' என, தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

அத்துடன், 100 ஊழியர்களை கொண்டுள்ள நிறுவனங்கள் அல்லது ஆலைகள், தங்களின் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றாலோ அல்லது ஆலையை மூடுவது என்றாலோ, அரசின் அனுமதியை பெற வேண்டும் என்பது தற்போதைய விதிமுறை. புதிய சட்டங்களில், 100 என்பதை, 300 ஊழியர்களாக உயர்த்தி விட்டனர்.

அதனால், 300க்கும் அதிகமான ஊழியர்களை கொண்ட நிறுவனங்கள் மட்டுமே, இனி ஊழியர்கள் பணிநீக்கம் மற்றும் ஆலை மூடுவது போன்றவற்றுக்கு அரசின் அனுமதியை பெற வேண்டும். 300க்கும் குறைவாக ஊழியர்கள் உள்ள நிறுவனங்கள், அரசின் அனுமதியை பெற வேண்டிய அவசியம் இல்லை.

இந்த விதிமுறையை தொழில் துறையினர் வரவேற்றுள்ள நிலையில், தொழிற்சங்கங்களோ, இது வேலை பாதுகாப்பை பலவீனப்படுத்தும் என்றும், நிறுவனங்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி இருப்பதாகவும் விமர்சித்துள்ளன.

தொழிற்சங்கங்களுடனோ அல்லது அரசியல் கட்சிகளுடனோ விரிவாக ஆலோசிக்காமல், இந்த புதிய சட்டங்கள் அமலாகியுள்ளன. புதிய சட்டங்களில் மூன்று, கொரோனா தொற்று காலத்தில், பார்லிமென்டில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டவை. எனவே, தொழிலாளர்களின் கவலைகளை தீர்க்க, தொழிற்சங்கங்களுடன் அரசு ஆலோசிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை மத்திய அரசு கவனத்தில் கொள்ளும் என, நம்பலாம்.

இருப்பினும், புதிய தொழிலாளர் சட்ட திருத்தத்தில், தொழிலாளர்களுக்கு சாதகமான பல அம்சங்கள் உள்ளன என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதே நேரத்தில், தொழிலாளர்களுக்கு சலுகைகளை வழங்க, தொழில் நிறுவனங்கள் கூடுதல் நிதியை செலவிட நேரிடும். அத்தகைய புதிய சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் நிறுவனங்கள், தங்களை தயார்படுத்திக் கொள்ள முனைப்புடன் செயல்பட வேண்டியது அவ சியம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us