விமான நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடிய ராஷ்மிகா
நேஷனல் கிரஷ் என ரசிகர்களால் அழைக்கப்படும் அளவிற்கு தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, சமீப காலமாக பாலிவுட்டிலும் தொடர்ந்து வெற்றி படங்களில் இடம்பெற்று வருகிறார். இந்த நிலையில் நீண்ட நாட்களாக காதலித்து வந்த ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா ஜோடியின் காதல் கடந்த மாதம் சுபமாக திருமண நிகழ்வில் முடிவடைந்தது. இதன்பிறகு கடந்த சில வாரங்களாக கணவருடன் தேனிலவு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்த ராஷ்மிகா மீண்டும் தனது படப்பிடிப்பு பணிகளை கவனிக்க துவங்கியுள்ளார்.
இந்த நிலையில் ராஷ்மிகாவின் பிறந்த நாளான இன்று (ஏப்-5) அவர் விமான பயணம் மேற்கொள்வதற்காக ஹைதராபாத் விமான நிலையம் வந்தார். அப்போது அங்கே காத்திருந்த ரசிகர்கள் சிலர் அவர் காரில் இருந்து இறங்கியதும் ஏற்கனவே தயாராக வைத்திருந்த சிறிய அளவிலான கேக்கை அவர் முன்பாக நீட்டி அதை வெட்ட செய்து அவரது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். ரசிகர்களின் மனம் கோணாமல் ராஷ்மிகாவும் கேக் வெட்டி அவர்களுக்கு ஊட்டி விட்டு அவர்களது வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டு விமான நிலையத்திற்குள் சென்றார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.