முதல் முறை வாக்காளராக வாக்கு செலுத்திய மமிதா பைஜூ
கேரளம் மாநிலத்தில் நேற்று (ஏப்.,9) சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது வாக்குகளை தவறாமல் செலுத்தினார்கள். குறிப்பாக சென்னையில் படப்பிடிப்பில் இருந்த மம்முட்டி வாக்கு செலுத்துவதற்காக கொச்சிக்கு காலையில் பறந்து வந்து வாக்கு செலுத்தினார். அதேபோல நேற்று அமெரிக்க பயணம் மேற்கொண்ட மோகன்லால், அதற்காகவே அதிகாலை 7 மணிக்கே வாக்கு சாவடிக்கு வந்து அரை மணி நேரம் காத்திருந்து தனது வாக்கை செலுத்தினார். மேலும் மலையாள திரையுலகத்தை சேர்ந்த இளம் நட்சத்திரங்களும் தங்களது வாக்குகளை செலுத்தியதை பார்க்க முடிந்தது. குறிப்பாக நடிகை மமிதா பைஜூ இந்த தேர்தலில் முதல் முறை வாக்காளராக தனது வாக்கை செலுத்தியுள்ளார்.
கோட்டயத்தில் கிடங்கூரில் உள்ள புனித மேரி மேல்நிலைப் பள்ளியில் அமைந்த வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கை செலுத்தினார் மமிதா பைஜூ. கடந்த உள்ளாட்சி தேர்தலிலேயே அவர் வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்தாலும் கூட அந்த சமயத்தில் அவர் வெளிநாட்டில் இருந்ததால் வாக்களிக்க முடியாமல் போனது என்றும் தற்போது கோட்டயம் அருகில் உள்ள முண்டக்காயம் பகுதியில் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்ததால் மமிதா பைஜூ இந்த முறை தவறாமல் தனது வாக்கை செலுத்தி விட்டார் என்றும் அவரது தாயார் மினி பைஜூ கூறியுள்ளார்.