உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகர் சத்யராஜ் குடும்பத்தினர் நடத்தும் அரசியல் நாடகம்: அப்பா, மகள் திமுக., மகன் தவெக.,

நடிகர் சத்யராஜ் குடும்பத்தினர் நடத்தும் அரசியல் நாடகம்: அப்பா, மகள் திமுக., மகன் தவெக.,

சென்னை : ஒரு புறம் நடிகர் சத்யராஜ் மற்றும் அவரது மகள் திவ்யா ஆகியோர் திமுக.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கின்றனர். இன்னொரு புறம் அவரது மகனும் நடிகருமான சிபிராஜ், தவெக.,வின் விஜய்க்கு ஆதரவு திரட்டுகிறார்.

தமிழகத்தில் தேர்தல் களம் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. நாளை மறுநாள் தேர்தல் நடக்கும் சூழலில் இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது. திமுக.,வுக்கு ஆதரவாக நடிகர் சத்யராஜ் தமிழகத்தில் பல இடங்களில் பிரசாரம் செய்தார். அதே போல் அவரது மகளான திவ்யா திமுக.,வில் தான் உள்ளார். அவரும் திமுக., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

இந்நிலையில் தன்னை எப்போதும் விஜய் ரசிகராக காட்டிக் கொள்ளும் சத்யராஜின் மகனான சிபிராஜ் இந்தமுறை தேர்தல் களத்தில் உள்ள விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். நேரடியாக பிரசாரத்திற்கு செல்லாவிட்டாலும் இன்ஸ்டா போன்ற வலைதளங்களில் அவரது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி உள்ளார். குறிப்பாக சிங்காநல்லூர் வேட்பாளர் கிரிபிரசாத், வேளச்சேரி வேட்பாளர் குமார் ஆகியோருக்கு ஆதரவு திரட்டினார். அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள், நிச்சயம் நல்லது நடக்கும் என பேசி வீடியோ வெளியிட்டு உள்ளார்.

மேலும் விஜய்க்கு ஆதரவாக சிபி கடிதம் ஒன்றையும் எழுதி உள்ளார். அதில், ‛‛அன்புள்ள விஜய் அண்ணாவிற்கு.... 1993, அக்., 3 அன்று தான் நான் உங்களை முதன்முதலில் சந்தித்தேன். பொள்ளாச்சி ஹோட்டல் மொட்டை மாடியில் அப்பாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள எஸ்.ஏ.சி மற்றும் விஜயகாந்த் ஆகியோருடன் நீங்கள் வந்திருந்தீர்கள். அந்த எளிமையான இளைஞன் எதிர்காலத்தில் என் இதயம் உட்பட கோடிக்கணக்கான இதயங்களை வென்று, ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுப்பார் என்று அப்போது எனக்குத் தெரியாது.

​நீங்கள் இனி நடிக்கப் போவதில்லை என்ற உண்மையை எங்களால் இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இருந்தாலும் ஒரு ரசிகனாக, நடிகனாக, சகோதரனாக மற்றும் நண்பனாக உங்கள் புதிய பாதைக்கான முடிவை மதிக்க வேண்டியது அவசியம். நான் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பேன். ​

​உங்களது வெற்றிகளை எனது சொந்த வெற்றியைப் போலவே நான் ரசித்து கொண்டாடினேன். ​கடந்த காலங்களில் உங்களுடன் நான் செலவிட்ட தனிப்பட்ட தருணங்கள், உணவு சாப்பிட்டது, போன் செய்தாலோ அல்லது குறுஞ்செய்தி அனுப்பினாலோ நீங்கள் உடனடியாக அளிக்கும் பதில்கள் இவை அனைத்தும் என் வாழ்வின் போற்றத்தக்க நினைவுகள்.

​நான் சினிமா பின்னணியில் இருந்து வந்தாலும், நான் சினிமா உலகிற்குள் நுழைய நீங்களே உந்துதலாக இருந்தீர்கள். ​உங்கள் படங்கள் பொழுதுபோக்காக பார்க்கப்பட்டாலும், அவை எனக்கு உண்மையான அன்பு, நட்பு, தன்னம்பிக்கை, சுயமரியாதை, முடிவெடுக்கும் திறனை கற்றுக்கொடுத்தன.

​'ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்ச நானே கேட்க மாட்டேன்' - இது வெறும் சினிமா வசனம் மட்டுமல்ல, நீங்கள் வாழும் தத்துவம் என்பதையும், எங்களை அவ்வாறு வாழத் தூண்டும் மந்திரம் என்பதையும் பல ஆண்டுகளாக நாங்கள் உணர்ந்துள்ளோம்.

​இவ்வாறு சிபி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !