விஜய் மீண்டும் நடித்தால் அவர் படத்தை இயக்க நான் ரெடி : ‛சிவகாசி' ரீ ரிலீஸில் பேரரசு சொன்ன தகவல்
பேரரசு இயக்கத்தில் விஜய், அசின் நடிப்பில் 2005ம் ஆண்டு வெளியாகி, வரவேற்பை பெற்ற படம் ‛சிவகாசி'. 21 ஆண்டுகளுக்கு பின் இந்த படம் கடந்தவாரம் ரீ ரிலீஸானது. இதுபற்றி பேரரசு கூறுகையில், ‛‛நான் ஏகப்பட்ட பிறந்தநாளை கடந்து போய் இருக்கிறேன். இந்த பிறந்தநாளை மறக்க மாட்டேன். காரணம், சிவகாசி ரீ ரிலீஸ் கொண்டாட்டத்தில் என் பிறந்தநாளை கேக் வெட்டி ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
2005ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி தீபாவளிக்கு சிவகாசி படம் ரிலீஸ் ஆனது. 21 ஆண்டுகளுக்குபின் இப்போது பல தியேட்டர்களுக்கு போய் பார்த்தேன். அனைத்து தியேட்டர்களிலும் கைதட்டல், விசில். குறிப்பாக, கோடம்பாக்கம் ஏரியா பாடலுக்கு ஆடுகிறார்கள்.அந்த பாடலில் ஏழைகள் பாழைகள் மனசு வச்சா நீயும் நாளை சியெம்முதான் என்ற வரிகளுக்கு அவ்வளவு வரவேற்பு. அந்தகாலத்தில் ஆண் ரசிகர்கள் இருந்தார்கள். இப்போது பெண் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடுகிறார்கள், ஆடி பாடுகிறார்கள்.
ஒரு படைப்பாளியாக நான் வேறு என்ன சொல்ல முடியும். அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த நேரத்தில் விஜய்க்கு நன்றி. எனக்கு அவர் கொடுத்த வாழ்க்கை திருப்பாச்சி என்ற முதல் படம். இப்போது அவர் அரசியலுக்கு வந்துவிட்டார். தேர்தல் முடிந்தவுடன் அவர் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்காவிட்டால் அவர் மீண்டும் சினிமாவில் நடிக்கணும். அவர் படத்தை இயக்க நானும் ரெடி.
சிவகாசி படத்தில் சென்டிமென்ட் வொர்க் அவுட் ஆகுமா என பயந்தேன். இப்போது அந்த சீனுக்கு வரவேற்பு இருக்கிறது. தெய்வத்துக்கு மாறுவேஷமா என்ற வரிகளையும் கை தட்டி ரசிக்கிறார்கள். இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்த ஏ.எம்.ரத்னத்துக்கு நன்றி. பலரும் திருப்பாச்சி படத்தை ரீ ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள். அது விரைவில் நடக்கும்'' என்றார்.