உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஆனந்தம்' 25 வருடங்கள் : இயக்குனர் லிங்குசாமி நன்றி

'ஆனந்தம்' 25 வருடங்கள் : இயக்குனர் லிங்குசாமி நன்றி

சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்பி சவுத்ரி தயாரிப்பில், இயக்குனர் லிங்குசாமியின் அறிமுகப் படமாக 2001ம் ஆண்டு இதே மே 25ம் தேதி வெளியான படம் 'ஆனந்தம்'. அப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகிறது.

எஸ்ஏ ராஜ்குமார் இசையில், மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, சினேகா, டெல்லி கணேஷ், ஸ்ரீவித்யா மற்றும் பலர் நடித்த படம்.

இப்படம் வெளியாகி 25 வருடங்கள் நிறைவடைந்ததை அடுத்து படத்தின் இயக்குனர் லிங்குசாமி எக்ஸ் தளத்தில், “ஆனந்தம் 25 ஆண்டுகள், கொண்டாட்டத்தில் நீங்கள் அளித்த அன்பான வாழ்த்துகளுக்கு அனைவருக்கும் நன்றி.

தனது 43 அறிமுக இயக்குநர்களில் ஒருவனாக என்னைத் தேர்ந்தெடுத்ததற்காக, சூப்பர்குட் பிலிம்ஸ், ஆர்பி சவுத்ரி சார் அவர்களுக்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இன்று எனக்குக் கிடைத்திருக்கும் ஒவ்வொரு அங்கீகாரமும், ஒவ்வொரு மைல்கல்லும், எனது கலைப்பயணத்தின் இந்த நீண்ட ஆயுளும், அத்தனையும் ஐயா, உங்கள் நம்பிக்கை மற்றும் ஆதரவால் மட்டுமே சாத்தியமாயின. எப்போதும் போலவே, உங்கள் ஆசீர்வாதம் எனக்குத் தொடரும் என்று நம்புகிறேன்.

மேலும், இந்தப் பயணத்தின் பின்பலமாகத் துணை நின்ற மம்முட்டி சார், முரளி சார், மற்ற நடிகர்கள் குழு, படக்குழுவினர் மற்றும் எனது சொந்தக் குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். காலத்தால் அழியாத இந்த நினைவின் ஒரு பகுதியாகத் திகழ்ந்த உங்கள் அனைவருக்கும் நன்றி,” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆர்பி சவுத்ரிக்கு தான் சேரும்
இதுபற்றி அலைப்பேசி வாயிலாக தினமலர் நாளிதழுக்கு லிங்குசாமி அளித்த பேட்டியில், ‛‛வெற்றி, தோல்வி பற்றி கவலைப்படாமல் தான் எனது முதல் படத்தை எடுத்தேன். இது எனது சொந்த குடும்ப படம் என்று சொல்லலாம். இந்த படம் பற்றி ஒரு வார்த்தை சொல்லணும் என்றால் நான் சாப்பிடும் சாப்பாடு, வாழும் வாழ்க்கை, பெயர் புகழும் எல்லாவற்றுக்கும் காரணம் ஆர்பி சவுத்ரி என்ற மாபெரும் கலைஞருக்கு தான் எல்லா புகழும் போய் சேரும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !