உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: களங்கமற்ற காதல் சித்திரமாய் கலையுலகை அலங்கரித்து, கணிசமான வசூலைப் பெறத் தவறிய “பொன்முடி”

பிளாஷ்பேக்: களங்கமற்ற காதல் சித்திரமாய் கலையுலகை அலங்கரித்து, கணிசமான வசூலைப் பெறத் தவறிய “பொன்முடி”


1950ன் ஆரம்பத்திலேயே அமரத்துவம் பெற்ற ஓர் அழியா காதல் சித்திரத்தைத் தந்து, தமிழ் இலக்கியத்தின் சுவையோடு, தனது தரமான கலையுலக கணக்கை ஆரம்பித்திருந்தது தமிழ் திரையுலகம். பாவேந்தர் பாரதிதாசனின் “எதிர்பாராத முத்தம்” என்ற துன்பியல் முடிவு கொண்ட கவிதை நடை குறுங்காப்பியமான இந்த காதல் கதையை, “மாடர்ன் தியேட்டர்ஸ்” தயாரிப்பு நிறுவனம், காப்பியத்தின் தலைவனான “பொன்முடி” என்ற பெயரையே படத்தின் தலைப்பாக்கி திரைப்படமாக எடுத்து, 1950ம் ஆண்டு பொங்கல் திருநாளன்று திரைக்கு அனுப்பியது. “இனிய தமிழ் நாட்டின் இயல்புடன் கூடிய களங்கமற்ற காதல் சித்திரம்” என்பதுதான் அன்றைய நாளில் இப்படத்திற்காக தயாரிப்பு தரப்பினரால் தரப்பட்டிருந்த விளம்பரம்.

காவேரி பூம்பட்டிணத்தில் மானன், சொக்கலிங்கம் என்ற பிரசித்தி பெற்ற இரண்டு வணிகர்கள். மானனின் மகன் பொன்முடி. சொக்கலிங்கத்தின் மகள் பூங்கோதை. இவ்விருவரும் பெரியவர்களான பின் தம்பதிகளாக்கிப் பார்க்க வேண்டும் என்பது மானன் மற்றும் சொக்கலிங்கத்தின் விருப்பமாகவும் இருந்தது. குழந்தைகள் இருவரும் பெரியவர்களாகி வாலிபப் பருவத்தை அடையும்போது அவர்களது அன்பு காதலாக மாறி, இருவரும் நேசிக்கத் தொடங்கிய நிலையில், பூர்வீக சொத்து ஒன்றை விற்பனை செய்வதில் மானனுக்கும், சொக்கலிங்கத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு உருவாகி, அது பெரும் பகையாக மாற, பின்னர் பொன்முடி மற்றும் பூங்கோதை ஆகிய இவ்விருவரின் காதல் கை கூடியதா? என்பதை ஒரு துன்பியல் முடிவோடு சொல்லிய ஒரு கவிதை நடை குறுங்காப்பியம்தான் இந்த “எதிர்பாராத முத்தம்”.

நடிகர் நரசிம்ம பாரதி பொன்முடியாகவும், நடிகை மாதுரிதேவி பூங்கோதையாகவும் இத்திரைப்படத்தில் தோன்றி, தமிழ் திரையுலகம் அதுவரை கண்டிராத அளவு மணற்பரப்பில் உருண்டு, புரண்டு ஒரு காதல் நெருக்கத்தோடு நடித்திருந்தனர். அமெரிக்கரான இயக்குநர் எல்லீஸ் ஆர் டங்கன், இனிய தமிழ் நாட்டின் இயல்புடன் கூடிய காதல் காட்சிகளை அமெரிக்க திரைப்படங்களுக்கு இணையாக உருவாக்கி காட்டியிருந்தார். அவர் தனித்து இயக்கி முழுமையாக முடித்திருந்த இறுதி திரைப்படமாகவும் வெளிவந்த திரைப்படம்தான் இந்த “பொன்முடி”.

நரசிம்ம பாரதி, மாதுரி தேவி, டி பாலசுப்ரமணியம், முத்துலட்சுமி, காளி என் ரத்தினம், எம் ஜி சக்ரபாணி, ஏ கருணாநிதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து, 1950ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வந்த இத்திரைப்படம், நெருக்கமான காதல் காட்சிகளை கொண்டிருந்ததால் பத்திரிகைகளின் விமர்சனத்திற்கு உட்பட்டும், பார்வையாளர்களின் அதிர்ச்சிக்குள்ளாகியும் படம் வணிக ரீதியாக ஒரு தோல்வியைத் தழுவி, தயாரிப்பு தரப்பினர் மற்றும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பிற்கும் ஒரு பெரும் ஏமாற்றத்தையே தந்தது இந்த “பொன்முடி”.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !