டிரைலர் பார்க்கும் வரை படத்தின் மீது நம்பிக்கை இல்லை: வேல ராமமூர்த்தி பேச்சு
சின்னத்திரை பிரபல நடிகர் சித்து, தர்ஷிகா, ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, சாப்ளின் பாலு மற்றும் பலர் நடித்துள்ள படம் 'டார்க் ஹெவன்'. பாலாஜி இயக்கியுள்ளார். நாட்டார் கதைகளில் சொல்லப்படும் அமானுஷ்யமான அம்சங்களை எடுத்துக் கொண்டு மர்மமான க்ரைம் திரில்லராக உருவாகி உள்ளது.
'ஐந்து கொலைகள் ஒரே விதத்தில் நடைபெற்றுள்ளன. ஆனால் எந்தத் தடயமுமில்லை' என்கிற புள்ளியில் தொடங்குகிற கதை, பரபரப்பூட்டும் திருப்பங்களுடன் படமாகியுள்ளது. ஜூலை 17ல் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகிறது.
இந்த பட டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் வேல. ராமமூர்த்தி பேசியதாவது: இயக்குநர் கே. பாக்யராஜ் காலமானது பெரிய இழப்பு. கடந்த 11ம் தேதி பாரதிராஜாவின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியின் போது என் அருகில் இருந்தார், இப்போது இல்லை. அந்தத் துயரத்தோடு தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்.
இந்தப் படத்தின் இயக்குநர் பாலாஜி ஒரு நாள் திருநெல்வேலியில் இருந்து பேசுகிறேன் என்று பேசினார். வழக்கமாக கதை சொல்லும் இயக்குநர்கள் சொல்வது போல்தான் இருந்தது. போனில் மிகவும் நம்பிக்கையுடன் தான் பேசினார். நான் சற்று சந்தேகப்பட்டேன். இந்தப் படம் எடுக்க முடியாமல் தோற்று விட்டால் நான் அமெரிக்கா சென்று விடுவேன் என்றார். அவரது நம்பிக்கையின் மீது நம்பிக்கை வைத்து நான் நடிக்கச் சம்மதித்தேன்.
படப்பிடிப்பில் எல்லாரும் குடும்பம் போல் பழகினார்கள். பாலாஜியின் உழைப்புக்காகவே இந்தப் படம் ஓட வேண்டும். பெரிய பெரிய படங்களுக்குக் கூட இவ்வளவு லொகேஷன்களில் எடுத்திருக்க மாட்டார்கள். அந்த அளவிற்குத் தேடித் தேடி எடுத்தார்கள். நான் உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் டிரைலர் பார்க்கிற வரை எனக்கு இந்தப் படத்தின் மீது நம்பிக்கை இல்லை. இப்போது சொல்கிறேன். இந்தப் படம் தோற்காது. அவர் அமெரிக்கா எல்லாம் செல்ல வேண்டியதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
படத்தின் கதாநாயகன் சித்து பேசும்போது, எனக்குக் குருநாதர் போல இருப்பவர் மைம் கோபி அண்ணன். அவர் ஒரு நடிப்பு பயிற்சிப்பள்ளி வைத்திருக்கிறார். அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். எனக்குப் பலரின் அறிமுகங்கள் கிடைத்தது அவரால்தான். இன்றைய காலகட்டத்தில் நாமே நம்மைப் பற்றி சொல்ல வேண்டும். மற்றவர்களிடம் நம்மை நாமே முன் வைக்க வேண்டும். அப்படிப்பட்ட காலத்தில் நாம் வாழ்கிறோம்.
'திருமணம்' தொடரில் நடித்ததற்குப் பிறகு வந்துள்ள ஒரு பெரிய வாய்ப்பாக இந்தப் படத்தைப் பார்க்கிறேன். இந்த படத்தின் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன். இந்தப் படத்தில் நடித்தவர்கள் மூலமும் நிறைய கற்றுக் கொண்டேன். உதாரணத்திற்கு இரவு மூன்று, நான்கு மணிக்கு படப்பிடிப்பில் இருந்தால் கூட ஜெயக்குமார் சார் வந்து எங்களிடம் பேசி சிரிக்க வைப்பார். எப்படி அவரால் முடிகிறது என்று நினைப்பேன். இப்படி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்று கற்றுக் கொண்டேன். இந்தப் படத்தை அனைவரும் திரையரங்கம் வந்து பார்த்து ஆதரிக்க வேண்டுகிறேன் என்றார்.