மகள் திருமணம் முடிந்த கையோடு பாக்யராஜ் குடும்பத்திற்கு குஷ்பு - சுந்தர் சி ஆறுதல்
நடிகை குஷ்பு - இயக்குனர் சுந்தர் சி யின் தம்பதியரின் மூத்த மகளான அவந்திகாவிற்கு ஷ்ரவன் சீனிவாசன் என்பவருடன் கடந்தவாரம் கோவாவில் திருமணம் நடந்தது. இந்த திருமண நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள், சினிமா நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர். இயக்குனர் பாக்யராஜூம் இந்த திருமணத்தில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பினார். அதற்கு அடுத்த மறுநாள் நடைபயிற்சி சென்றவருக்கு நெஞ்சுவலி ஏற்பட மாரடைப்பால் காலமானார். ஒட்டுமொத்த திரையுலகினருக்கும் இது அதிர்ச்சியான சம்பவமாக இருந்தது. அவருக்கு அஞ்சலி செலுத்திய பலரும் நேற்று தானே திருமணத்தில் பார்த்தேன் என வருத்தப்பட்டு பேசினர்.
மகள் திருமணத்தால் பாக்யராஜ் மறைவுக்கு குஷ்பு, சுந்தர் சி தம்பதியர் வர முடியவில்லை. இந்நிலையில் இன்று சென்னை திரும்பிய இந்த தம்பதியர் பாக்யராஜ் இல்லத்திற்கு சென்று அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அவரது மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு, மருமகள் கிகி எனும் கீர்த்தி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
இதேப்போல் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, லெஜண்ட் சரவணன், நடிகை அதுல்யா ரவி உள்ளிட்டவர்கள் வெளியூரில் இருந்ததால் இறுதிசடங்கு நிகழ்வுகள் முடிந்த பின்னர் பாக்யராஜ் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.