வட அமெரிக்காவில் பெரிய சாதனையை நெருங்கும் சமந்தாவின் 'மா இன்ட்டி பங்காரம்'
நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா நடிப்பில் கடந்த ஜூன் 19ம் தேதி வெளியான படம் 'மா இன்ட்டி பங்காரம்'. இப்படம் உலகளவில் 80 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதோடு தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. குடும்ப பின்னணி கொண்ட இந்த படத்தை சமந்தா, ராஜ் நிடிமோரு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளார்கள்.
இந்நிலையில் தற்போது இந்த படம் வட அமெரிக்காவில் மற்றொரு சிறப்பான சாதனையை படைக்க தயாராகி வருகிறது. அங்கு இதுவரை 1.8 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ள இப்படம், 2 மில்லியன் டாலர் மைல்கல்லைக் கடக்க இன்னும் 0.2 மில்லியன் டாலர்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இந்த இலக்கை எட்டினால், அது சமந்தாவிற்கும் இந்த படத்திற்கும் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக அமையும்.
இந்த படத்தின் டிக்கெட் விற்பனையும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புக் மை ஷோ தளத்தில் சுமார் 25,000 டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. என்றாலும் இந்த வாரத்தில் வேறு சில தெலுங்குத் திரைப்படங்களும் வெளியாக உள்ள நிலையில், அந்தப் போட்டிகளுக்கு மத்தியில் மா இன்ட்டி பங்காரம் தனது வசூலை எவ்வாறு தக்க வைத்துக் கொள்ளப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.