பிளாஷ்பேக்: இந்தியில் ரீமேக் ஆன ராம்கி படம்
ராம்கியின் சினிமா கேரியரில் முக்கியமான படம் 'மருதுபாண்டி'. மனோஜ் குமார் இயக்கியிருந்தார். சீதா, நிரோசா, நாசர், எஸ்.எஸ். சந்திரன், செந்தில், கோவை சரளா, ராகவி மற்றும் பிரதீப் சக்தி ஆகியோரும் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார்.
அம்மாபட்டி எனும் ஊரில் மருதுபாண்டி (ராம்கி) பரிசல் ஓட்டுவார், இரவில் ஊரை பாதுகாப்பார். அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி தங்கை இருப்பார். அவரை ஒரு தாயை போல பாதுகாப்பார் மருது பாண்டி. அவன் செய்யும் வேலைக்காக அவனுக்கு ஊர் மக்கள் உணவை ஊதியமாக கொடுத்து வந்தனர். அம்மாபட்டிக்கு நடனமாட வந்த குழு கனகவள்ளியை அங்கேயே தனிமையில் விட்டுச் செல்கிறது. இதனால் அவ்வூர் மக்கள் கனகவள்ளிக்கு தங்குவதற்கென ஓர் வீட்டை தயார் செய்து கொடுக்கின்றனர். கனகவள்ளியும் மெதுவாக மருது பாண்டியின் மேல் காதல் கொள்கின்றாள்.
திடீரென ஒரு நாள் மருதுபாண்டியை கைது செய்ய போலீஸ் படை வருகிறது. உண்மையில் மருது பாண்டி யார்? அவன் தங்கைக்கு என்ன நடந்தது. இடையில் வந்து சேர்ந்த கனகவள்ளி யார் என்பது படத்தின் மீதி கதை.
இந்த படத்தில் முதலில் சத்யராஜ் நடிப்பதாக இருந்தது. ஆனால் என்ன காரணத்தாலோ அவர் நடிக்க மறுத்துவிட்டார். இந்த படம் கன்னட மொழியில் சசிகுமாருடன் கொல்லூர் காலா எனும் பெயரிலும், ஹிந்தி மொழியில் கோவிந்தாவுடன் ஆக் எனும் பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தை முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு தயாரித்தார். இந்த படத்தில் நடித்தபோதுதான் ராம்கியும், நிரோஷாவும் காதல் கொண்டனர்.