உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கே பாலசந்தர் - நாகேஷ் இணையின் ஈடில்லா திரை ஓவியங்கள்...!

கே பாலசந்தர் - நாகேஷ் இணையின் ஈடில்லா திரை ஓவியங்கள்...!

வணிக ரீதியான திரைப்படங்களின் வருகைக்கு மத்தியில், வற்றாத ஜீவநதி போல் பிறர் சொல்லத் தயங்கும் சமூகப் பிரச்னைகளை தனது ஒப்பில்லா படைப்பாற்றல் மூலம் துணிச்சலாக சொல்லி, வெள்ளித்திரையில் வெளிச்சம் போட்டு காட்டியவர்தான் இயக்குநர் கே பாலசந்தர். இன்றைய உச்ச நட்சத்திரங்கள் முதல் பல குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர்களின் கலையுலகப் பயணத்திற்கு ஆணிவேராக இருந்த இவர், ஒரு திரைப்பட இயக்குநராக விருட்சம் கண்டது “நீர்க்குமிழி” என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான். இவரது முதல் திரைப்படத்தின் நாயகனாக களம் காணப்பட்டவர் நடிகர் நாகேஷ்.

ஒரு கதாநாயக நடிகருக்கும், கதாநாயகி நடிகைக்கும் கெமிஸ்ட்ரி பொருந்தி போவது என்பதை நாம் அக்காலம் முதல் இக்காலம் வரை பார்த்து, ரசித்து, விமர்சித்தும் வந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் ஒரு இயக்குநருக்கும், ஒரு நடிகருக்கும் கெமிஸ்ட்ரி பொருந்திப் போவது என்பது இயல்பான ஒன்றல்ல. அப்படி ஒரு கெமிஸ்ட்ரி இவ்விருவருக்கும் பொருந்திப் போனதால்தான், ஒன்றல்ல இரண்டல்ல பல காவியப் படைப்புகள் இவ்விருவரின் பங்களிப்பில் பிறக்க வழிவகுத்துத் தந்தது.



தமிழ் திரையுலக வரலாற்றிலேயே ஒரு இயக்குநரின் எண்ண ஓட்டத்திற்கும், ஒரு நடிகரின் நடிப்பாற்றலுக்கும் இடையே, அனைவரும் அதிசயித்துப் போகும் அளவிற்கு கெமிஸ்ட்ரி பொருந்திப் போயிருக்கிறது என்றால், அதற்கு தலைசிறந்த உதாரணமாக வாழ்ந்து மறைந்தவர்கள் தான் இயக்குநர் கே பாலசந்தர் - நடிகர் நாகேஷ் என்ற இமாலய கூட்டணி.

சர்வர் சுந்தரம் (1964)



ஒரு நகைச்சுவை நடிகனாகவே பார்த்துப் பழக்கப்பட்டிருந்த நமது பார்வையை மாற்றி அமைத்து, நடிகர் நாகேஷிற்குள் இருந்த ஒரு அசாத்தியமான திரைக்கலைஞனை உலகிற்கே அடையாளம் காட்டி, அதிசயிக்க செய்திருந்தார் இயக்குநர் கே பாலசந்தர். 1964ம் ஆண்டு தனது வெற்றி பெற்ற மேடை நாடகமான “சர்வர் சுந்தரம்” சினிமா வடிவம் பெற்றபோது, அவரது கதை வசனத்தில் நடிகர் நாகேஷ் கதையின் நாயகனாக நடித்து, நடிப்பின் வேறொரு பரிமாணத்தை காட்டி, இவ்விருவரின் கூட்டணிக்கு பலம் சேர்த்த முதல் திரைப்படமாக வெளிவந்து வெற்றி வாகை சூடியது. ஆனால் இந்த படத்தை பாலசந்தர் இயக்கவில்லை, கிருஷ்ணன் பஞ்சு இயக்கினர்.

நீர்க்குமிழி (1965)



மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் ஒரு புற்றுநோயளி இளைஞன், தன்னைச் சுற்றியுள்ளவர்களை எவ்வாறு கலகலப்பாக வைத்திருக்கின்றான் என்பதை நாகேஷ் என்ற அந்த அற்புத கலைஞனுக்குள் இருந்த அபார நடிப்பாற்றலை வெளிக் கொண்டு வந்து, பார்ப்போரின் கண்களை கசியச் செய்திருப்பார் இயக்குநர் கே பாலசந்தர். அந்த படம் தான் நீர்க்குமிழி. பாலசந்தருக்கு இயக்குனராக இதுதான் முதல் படம்.

மேஜர் சந்திரகாந்த் (1966)



இயக்குநர் கே பாலசந்தர் மற்றும் நாகேஷ் கூட்டணியில் வந்த மற்றுமொரு இதயம் தொட்ட திரைக்காவியம் ‛மேஜர் சந்திரகாந்த்'. தங்கை மீது பாசம் கொண்ட அண்ணனாக, தங்கையின் வாழ்க்கையைப் பறித்த கயவனைத் தேடி அலைந்து கொலை செய்யும் ஒரு கொலைகாரனாக, கொலையானவனின் வீட்டிலேயே தஞ்சம் புகுந்து, அவனது தந்தையின் அன்புக்குப் பாத்திரமானவனாக என நகைச்சுவை நடிகர் என்று எல்லோராலும் அறியப்பட்டிருந்த நடிகர் நாகேஷ் என்ற ஆற்றல்மிகு திரைக்கலைஞனின் முப்பரிமாண நடிப்பை வெளிச்சம் போட்டு காட்டியிருப்பார் இயக்குநர் கே பாலசந்தர்.

எதிர்நீச்சல் (1968)



இந்த இரண்டு கலை மேதைகளின் கூட்டணியில் வந்த மற்றுமொரு வெற்றிக் காவியம்தான் “எதிர்நீச்சல்”. அவமானங்களையும், வலிகளையும் சதா சுமந்த வண்ணம் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருக்கும் ஒரு இளைஞன், அவைகளையே படிக்கட்டுகளாக மாற்றி எவ்வாறு சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைகின்றான் என்பதை 'மாது' என்ற ஒரு அனாதை கதாபாத்திரத்தின் மூலம் சொல்ல முனைந்து, நடிகர் நாகேஷ் என்ற அபார திரைக்கலைஞனுக்குள் ஒளிந்திருந்த 'மாது'வை கண்டறிந்து, வெற்றி கண்டார் இயக்குநர் கே பாலசந்தர்.

இவை தவிர, “பாமா விஜயம்”, “தாமரை நெஞ்சம்”, “பூவா தலையா”, “புன்னகை”, “அவர்கள்” என இயக்குநர் கே பாலசந்தரின் திரைப்படங்ளில் நடிகர் நாகேஷின் பங்கு என்பது, ஒரு நகைச்சுவை நடிகன் என்ற குட்டைக்குள் தேங்கி நிற்கும் நீராக நின்றுவிடாமல், ஆர்ப்பறித்து ஓடும் காட்டாற்று வெள்ளமாய் எல்லைகளைக் கடந்து, நடிப்பென்ற கடலில் சங்கமமாக காரணமாய் அமைந்தது இயக்குநர் கே பாலசந்தரின் திரைப்படங்கள் என்பதில் யாருக்கும் எவ்வித மாற்றுக் கருத்தும் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !