பிரபாஸ் படப்பிடிப்பில் பாலிவுட் நடிகருக்கு சுகவீனம் ; முதல்வர் வரை சென்ற விவகாரம்
பிரபாஸ் தற்போது தெலுங்கில் 'ஸ்பிரிட்' மற்றும் 'பவுஸி' ஆகிய படங்களில் மாறி மாறி நடித்து வருகிறார். இதில் ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவாகி வரும் 'பவுஸி' படத்தின் படப்பிடிப்பு சமீப நாட்களாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் குணச்சித்ர நடிகரான கொல்கத்தாவை சேர்ந்த ராஜேஷ் சர்மா என்பவர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
படப்பிடிப்பின் போது ஒருநாள் இரவு நேரத்தில் அவருக்கு காலில் ஏதோ பூச்சி கடித்தது போன்று உணர்ந்துள்ளார் அதை தொடர்ந்து அடுத்த நாளில் அவரது உடலில் அலர்ஜி ஏற்பட்டு அவதிப்பட்டு உள்ளார் இதனை தொடர்ந்து அவர் தனது சொந்த ஊரான கொல்கத்தாவுக்கு விமானத்தில் கிளம்பி செல்லும் போது மிகவும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தற்போது கொல்கத்தாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள அனைத்து இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் இதுகுறித்து தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இடம் இந்த சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.
மேலும் படப்பிடிப்பு தளத்தில் ஏன் போதிய அவசர உதவி வசதிகள் இல்லை, உடல்நிலை மோசம் அடைந்தபோது ஏன், ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு அவரை உடனடியாக அழைத்துச் செல்லவில்லை வேலை செய்யும் இடத்தில் சுகாதாரமும் பாதுகாப்பும் முறையாக பின்பற்றப்பட்டனவா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். இந்த விவகாரம் தற்போது தெலுங்கு திரை உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.