உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பெத்தி கொடுத்த அதிர்ச்சி : தெலுங்கில் இருந்து வெளியேறுகிறாரா ஜான்வி கபூர்?

பெத்தி கொடுத்த அதிர்ச்சி : தெலுங்கில் இருந்து வெளியேறுகிறாரா ஜான்வி கபூர்?

நடிகை ஜான்வி கபூர் தனது திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான கட்டத்தில் இருப்பதாக தெரிகிறது. ராம் சரணுக்கு ஜோடியாக அவர் நடித்த பெத்தி படம் வெளியானதில் இருந்தே, அவர் தெலுங்கு சினிமாவிலோ அல்லது பாலிவுட்டிலோ அதிகாரப்பூர்வமாக எந்தவொரு புதிய பெரிய படத்திலும் ஒப்பந்தமாகவில்லை.

பெத்தி படத்தின் மீது ஜான்வி கபூர் பெரும் எதிர்பார்ப்புகளை வைத்திருந்தார். இது தன்னை அகில இந்திய அளவில் பான் இந்தியா நடிகையாக ஒரு வலுவான நிலைக்கு உயர்த்தும் என்று அவர் எதிர்பார்த்தார். வணிக ரீதியாக இப்படம் நன்றாக வசூல் செய்த போதிலும், படத்தில் அவரது கதாபாத்திரம் மற்றும் அவரது நடிப்பு ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு, இணையதளங்களில் ட்ரோல்களுக்கு உள்ளானது. படம் வெளியான உடனேயே, ஜான்வி இந்த படத்தைப் பற்றி பேசுவதையோ அல்லது விளம்பரப்படுத்துவதையோ முற்றிலும் தவிர்த்துவிட்டார். இது ஒட்டுமொத்த அப்படத்தின் மீது அவருக்கும் இருந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்துவதாக செய்திகள் வெளியாகின.

இனிவரும் காலங்களில் தெலுங்கு படங்களைத் தேர்ந்தெடுப்பதில் அவர் மிகவும் கவனமாக இருப்பார் என்றும், தனது கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் மற்றும் அது எழுதப்பட்ட விதம் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார் என்றும் சினிமா வட்டாரங்களில் பலரும் கருத்து வெளியிட்டார்கள். இந்த நிலையில் தற்போது நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வலுவான கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை என்றால், அவர் தெலுங்கு சினிமாவில் நடிப்பதை வெகுவாகக் குறைத்துக் கொள்ளவும் வாய்ப்புள்ளது என்று தகவல் நிலவுகிறது.

இதற்கிடையில், அல்லு அர்ஜுனின் அடுத்த படமான ராக்காவில் ஜான்வி கபூர் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக தொடர்ந்து செய்தி பரவி வருகின்றன. இருப்பினும், இது குறித்து தயாரிப்பாளர்களிடமிருந்தோ அல்லது நடிகை தரப்பிலிருந்தோ எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வரவில்லை.

அதேநேரத்தில், பாலிவுட்டின் முன்னணி நடிகைகளின் வரிசையில் தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ளவும் ஜான்வி கபூர் போராடி வருகிறார். பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் அவர் நடித்திருந்தாலும், ரன்வீர் சிங் போன்ற பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதற்கான தீவிர முயற்சியில் அவர் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !