உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தேசிய விருதுக்கு பின் வெற்றிகரமான நடிகராகவே கருதுகிறேன் : விக்ராந்த் மாஸே

தேசிய விருதுக்கு பின் வெற்றிகரமான நடிகராகவே கருதுகிறேன் : விக்ராந்த் மாஸே

பாலிவுட்டின் பிரபல நடிகர் விக்ராந்த் மாஸே. ‛12த் பெயில்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றவர். 'பிரீதம் அண்ட் பெட்ரோ' தொடரில் தனது சிறப்பான நடிப்பிற்காக பரவலான பாராட்டை பெற்ற இவரது நடிப்பில் அடுத்து ஜூலை 24 அன்று நெட்ப்ளிக்ஸில் ஓடிடியில் வெளியாகவுள்ள உள்ள தொடர் 'முசாபிர் கபே'. ருச்சிர் அருண் இயக்கி உள்ளார். விக்ராந்த் அளித்த பேட்டி....

'முசாபிர் கபே' தொடர், இதில் நடிக்க காரணமாக இருந்தது என்ன?
இந்த கதையின் உணர்வுப்பூர்வமான நேர்மைதான் என்னை மிகவும் ஈர்த்தது. இதில் நான் ஏற்றுள்ள 'சந்தர்' கதாபாத்திரம் வாழ்க்கையின் பலருக்கும் நெருக்கமானவராக தோன்றக்கூடியவர். நிஜமான மனிதர்களைப் போன்ற உணர்வை தரும் கதாபாத்திரங்களில் நடிக்க நான் விரும்புகிறேன். சந்தர் நிச்சயம் அந்த வகை கதாபாத்திரம்.

வேதிகா உடனான கெமிஸ்டிரி பாராட்டப்படுகிறது. அவருடன் பணியாற்றிய அனுபவம் பற்றி?
வேதிகா மற்றும் மஹிமா இருவரும் தங்கள் வேலையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். படப்பிடிப்புக்கு முன்பே எங்கள் கதாபாத்திரங்களை புரிந்துகொள்ள நேரம் ஒதுக்கி பயிற்சி எடுத்தோம். அந்த இயல்பான புரிதல் திரையிலும் வெளிப்பட்டது. நாங்கள் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி.

இந்த தொடரை இணைந்து தயாரிக்க உங்களைத் தூண்டியது எது?

நீண்ட காலமாகவே திரைப்படங்களைத் தயாரிப்பது குறித்து யோசித்தேன். இந்தத் தொடரின் கதையை கேட்டவுடனேயே, இதில் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், இணைத் தயாரிப்பாளராகவும் இணைய வேண்டும் என்று முடிவு செய்தேன். நான் மனதார நம்பிய கதை இது. அதேசமயம், நான் தயாரிப்பாளராக இருந்ததால் எந்தவித கூடுதல் அழுத்தத்தையும் உணரவில்லை. சரண்யா ராஜகோபால் போன்ற திறமையான எழுத்தாளர் இருக்கும்போது, ​​பாதி வெற்றி கிடைத்ததாகவே அர்த்தம். ஒரு வலுவான திரைக்கதை, ஒட்டுமொத்த திரைப்படத் தயாரிப்பு செயல்முறையையும் மிகவும் எளிதாக்குகிறது.

தேசிய விருது வென்ற பின் உங்களை ஒரு வெற்றிகரமான நடிகராகக் கருதுகிறீர்களா?
உண்மை தான் என்னை வெற்றிகரமானவராகவே கருதுகிறேன். ஏனெனில், இந்த நிலையை அடைவதற்கு பல ஆண்டுகால அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் தேவைப்பட்டது. இந்த இடத்திற்கு வர எனக்கு இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான கடின உழைப்பு தேவைப்பட்டது. இந்தப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இருப்பினும், இதை எனது இறுதி இலக்காக நான் பார்க்கவில்லை. இன்னும் நான் சாதிக்க வேண்டியவை நிறைய உள்ளன. பல அர்த்தமுள்ள திரைப்படங்களை உருவாக்கவும், ஒரு நடிகராக எனக்கு சவாலளிக்கக்கூடிய கதாபாத்திரங்களை ஏற்றுத் தொடர்ந்து நடிக்கவும் விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !