பிளாஷ்பேக்: 60 ஆண்டுகளுக்கு முன்பே முகமாற்று அறுவை சிகிச்சையை அறிமுகப்படுத்திய “ஆசைமுகம்”
எம் ஜி ஆரின் கலையுலகப் பயணத்தில் ஒரு முக்கியமான, வெற்றிகரமான ஆண்டாக 1965ஐ நாம் குறிப்பிட்டுச் சொல்லலாம். இந்த ஆண்டில் மட்டும் இவரது ஆறு திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கின்றன. ஆண்டின் துவக்கத்திலேயே பொங்கல் வெளியீடாக வந்த “எங்க வீட்டுப் பிள்ளை” ஒரு மாபெரும் வெற்றிக் காவியமாக வந்து, அந்த ஆண்டிற்கான எம் ஜி ஆரின் கலையுலகக் கணக்கை ஆரம்பித்து வைத்தது. தொடர்ந்து வந்த “பணம் படைத்தவன்”, “ஆயிரத்தில் ஒருவன்”, “கலங்கரை விளக்கம்”, “கன்னித்தாய்” என வரிசைகட்டி வந்த நிலையில், அந்த ஆண்டின் இறுதியில் டிசம்பர் திங்கள் 10 அன்று வெளிவந்த ஒரு தரமான எம் ஜி ஆர் திரைப்படம்தான் “ஆசைமுகம்”.
குடும்ப உறவுகளின் உணர்வுகளையும், காதலையும் அழகாக காண்பித்து, எம் ஜி ஆர் திரைப்படங்களில் இடம்பெறும் வழக்கமான அதிரடி சண்டைக் காட்சிகளுடன் வெளிவந்து, ரசிகர்களை மகிழ்வித்த இந்த “ஆசைமுகம்” திரைப்படத்தை இயக்கியவர் இயக்குநர் பி புல்லையா. த்ரில்லர் கதைகளின் மன்னன் ஆல்பிரட் ஹிட்ச்காக் இயக்கி, 1934 மற்றும் 1956ம் ஆண்டுகளில் வெளிவந்த “தி மேன் ஹூ நியூ டூ மச்” என்ற ஹாலிவுட் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படத்திற்கு படக்குழவினர் முதலில் வைத்த பெயர் “எல்லாம் அறிந்த மனிதன்”. படத்தின் தலைப்பு மிக நீளமாக இருப்பதாக உணர்ந்த எம் ஜி ஆர், படத்திற்கு “ஆசைமுகம்” என்ற பெயரை பரிந்துரைக்க பின் அதுவே தலைப்பானது.
சிவசங்கரன் என்ற ஒரு பணக்கார தோட்ட உரிமையாளரின் சொத்துக்களை அபகரிக்க, அவரது முன்னாள் மேலாளர் வரதன் என்ற தீய எண்ணம் படைத்த ஒருவன் தனது கூட்டாளியான வஜ்ரவேல் என்பவனை தனது திட்டத்திற்கு பயன்படுத்தி, சிவசங்கரனின் வாரிசான அவரது மகன் மனோகரின் முகத்தைப்போல வஜ்ரவேலுவின் முகத்தை ப்ளாஸ்டிக் சர்ஜரி என்ற அறுவை சிகிச்சை மூலம் மாற்றி, ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்ய எத்தனிப்பதுதான் இப்படத்தின் கதை.
சமூகத்தில் மிகப் பெரிய அந்தஸ்தில் உள்ளவர்கள், நடிகர், நடிகைகள் என பலர் தங்களது உடல் உறுப்புகளில் உள்ள தேவையற்ற சதைப் பகுதிகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, வசீகரத்தை மேம்படுத்திக் காட்டக் கூடிய ப்ளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவத்தை நாடிச் சென்று கொண்டிருப்பதை இன்று நாம் சர்வ சாதரணமாக பார்த்து வருகின்றோம். ஆனால் 1960களிலேயே, ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தமிழ் திரைப்படம் இந்த நவீன சிகிச்சை முறையை நமக்கு சுட்டிக் காட்டி, கட்டியம் கூறிச் சென்றிருப்பது போல் வெளிவந்த திரைப்படம்தான் இந்த “ஆசைமுகம்” திரைப்படம் என்பது பலர் அறியாத ஒன்று.
1965ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோகரன் என்ற கதாநாயகன் கதாபாத்திரத்தில் எம் ஜி ஆரும், செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடிகை சரோஜாதேவியும் நடிக்க, எம் என் நம்பியார், நாகேஷ், எஸ் வி ராமதாஸ், கீதாஞ்சலி, கே ஆர் ராம்சிங், கே டி சந்தானம் என பலர் நடித்திருந்தனர். படத்தின் பாடல்கள் அனைத்தையும் கவிஞர் வாலி எழுத, இசையமைத்திருந்தார் எஸ் எம் சுப்பையா நாயுடு. இது மற்ற எம் ஜி ஆர் திரைப்படங்களைப் போல் பெரிய வெற்றியைப் பெறத் தவறியிருந்தாலும், வித்தியாசமான கதைக் களம், காட்சி அமைப்பு, பாடல்கள் போன்றவற்றால் இன்றும் ரசிகர்கள் ரசித்துப் பார்க்கும் பல எம் ஜி ஆர் திரைப்படங்களில் ஒன்றாகவே இத்திரைப்படமும் இருந்து வருகின்றது என்பதுதான் நிதர்சனமான உண்மை.