சாய் பல்லவியின் 'ஏக் தின்' ஓடிடியில் இந்தியாவிலும் வெளியீடு!
டில்லியில் 'ராமாயணா' படக்குழுவினர் டிரைலர் வெளியீட்டு விழாவைக் கொண்டாடி வரும் வேளையில், நடிகை சாய் பல்லவியின் பாலிவுட் அறிமுகத் திரைப்படமான 'ஏக் தின்' இந்தியாவில் அமேசான் பிரைம் வீடியோவில் தற்போது வெளியாகி உள்ளது.
வெளிநாடுகளில் வாடகை அடிப்படையில் வெளியாகியுள்ள இப்படம், இந்தியாவில் வெளியிடப்படவில்லை என்று அப்படக்குழு சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தார்கள். ஆனால் தற்போது இந்தியாவிலும் இந்தப் படம் பிரைம் சந்தாதாரர்களுக்கு இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளியிடப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார்கள்.
இந்த காதல் படத்தில் சாய் பல்லவியுடன் ஜூனைத்கான் நடித்துள்ளார். மேலும், குணால் கபூர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சுனில் பாண்டே இயக்கத்தில், அமீர் கான் புரொடக்ஷன்ஸ் சார்பில் அமீர் கான், மன்சூர் கான் மற்றும் அபர்ணா புரோஹித் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். பெரிய பெயர்கள் இந்தப் படத்துடன் இணைந்திருந்தாலும், திரையரங்குகளில் இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தற்போது ஓடிடி வெளியீடு மூலம் இப்படம் மீண்டும் ரசிகர்களைச் சென்றடைய ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. திரையரங்குகளில் தவறவிட்ட அங்கீகாரத்தை, ஓடிடி-யில் இந்தப் படம் பெறுகிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.