எனக்கு பாராட்டு வேணாம், வாய்ப்பு கொடுங்க : நடிகை வடிவுக்கரசி உருக்கமான வேண்டுகோள்
அர்ஜூன் தாஸ் நடிப்பில், அறிமுக இயக்குனர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவான “கான் சிட்டி” படத்தின் நன்றி அறிவிப்பு விழாவில், அந்த படத்தில் முக்கியமான ரோலில் நடித்த வடிவுக்கரசி பேசியது வைரலாகி உள்ளது.
அவர் பேசுகையில், ‛‛நான் இன்று அனைவர் முன் நிற்பதே ஒரு மறுபிறவி கிடைத்ததுபோல. அதற்குக் காரணமான அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தில் நடித்ததபோது எனக்கு இதயத்தில் பிரச்னை ஏற்பட்டது. அதற்கான மருத்துவ செலவு, ஆபரேசனுக்கு பெருந்தொகை தேவைப்பட்டது. அப்போது என்னை தொடர்பு கொண்டு கவலைப்படாதீர்கள் என சுகாசினி பேசினார். அவருடன் ஸ்ரீப்ரியாவும் இணைந்து உதவினார். அவர்கள் ராஜ்குமார் சேதுபதி, மணிரத்னம், கார்த்திக், சூர்யா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஏ.சி.எஸ்.சண்முகம், சரத்குமார், ராதிகா உள்ளிட்ட பலருடன் பேசி, பல லட்சம் ரூபாய் செலவு செய்து எனக்கு மீண்டும் வாழ்க்கை அளித்தார்கள். இன்று நான் உங்கள் முன்னால் நின்று பேசுவதற்கே அவர்கள்தான் காரணம். அந்த அன்பை நான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.
அந்த காலத்தில் 25 வாரங்கள், 50 வாரங்கள், 100 நாட்கள், 175 நாட்கள் என படங்கள் ஓடி வெற்றி கொண்டாடப்பட்டன. இன்று 25-வது நாள் விழாவாக இருந்தாலும், அந்த மகிழ்ச்சி அதே அளவுக்கு இருக்கிறது. நான் அதிகமாக யுடியூப் பார்ப்பதில்லை. ஆனால் இந்தப் படம் வெளியான பிறகு பல விமர்சனங்களையும், ரசிகர்களின் கருத்துகளையும் பார்த்தேன். டிரைலரை பார்த்துவிட்டு, “படம் நன்றாக இருந்தால் பார்ப்போம்” என்று நினைத்தவர்கள், படம் பார்த்த பிறகு “ஒரு நிமிடம்கூட சலிக்காமல் முழுப் படத்தையும் ரசித்தோம்” என்று கூறியதை கேட்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, “வடிவுக்கரசி அம்மா மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்” என்று பலரும் எழுதியிருந்தார்கள். அந்தப் பாராட்டுகளை நான் மீண்டும் மீண்டும் படித்தேன். அவை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்தன.
ஆனால், ஒரு சிறிய வேண்டுகோள் இருக்கிறது. “வடிவுக்கரசி நன்றாக நடித்திருக்கிறார்” என்று மட்டும் எழுதாமல், “இவருக்கு இன்னும் அதிகமான வாய்ப்புகள் கொடுக்க வேண்டும்” என்றும் எழுதுங்கள். அந்த ஒரு வரி தான் எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு அடுத்த வாய்ப்பை பெற்றுத் தரும். இந்த படத்தில் நடித்த அர்ஜூஸ்தாஸ், யோகிபாபு உட்பட பலர் அடுத்த படங்களில் பிஸியாகிவிட்டனர். நான் வீட்டில் சும்மா இருக்கிறேன். ஆகவே, எனக்கு வாய்ப்பு கொடுங்கள். 40 ஆண்டுகளுக்கு மேலாக 400 படங்களில் நடித்துவிட்டேன். இப்போதும் சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். எனக்கு பணம், சம்பளம் தேவை. ஆகவே எனக்கு நடிக்க வாய்ப்பு' கொடுங்கள். ஒரு நாள், இரண்டு நாள் வேலை என்றால் கூட பரவாயில்லை. எனக்கு வாய்ப்பு கொடுங்கள்' என்று உருக்கமாக பேசினார்.