உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : தமிழில் வெற்றி பெற்ற ஹாலிவுட் குடும்ப கதை

பிளாஷ்பேக் : தமிழில் வெற்றி பெற்ற ஹாலிவுட் குடும்ப கதை

கருப்பு, வெள்ளை காலத்தில் முன்னணி இயக்குநராக இருந்த டி.ஆர்.ராமண்ணா தமிழ், தெலுங்கில் தயாரித்த படம் 'மணப்பந்தல்'. எஸ்.எஸ். ராஜேந்திரன், சரோஜாதேவி, எஸ்.ஏ.அசோகன், ஈ.வி.சரோஜா, பி.கண்ணாம்பா, கே.மாலதி, கே.ஏ.தங்கவேலு, எம்.சரோஜா, சித்தூர் வி.நாகையா, எஸ்.ராமாராவ், 'என்னத்த கண்ணையா, ரீட்டா, ராஜேஸ்வரி, சேதுபதி, டி.கே.சம்பங்கி மற்றும் கமலா ஆகியோர் நடித்திருந்தனர். வி.என்.ரெட்டி இயக்கினார்.

இது ஹாலிவுட்டில் வெளியான 'சப்ரினா' என்ற புகழ்பெற்ற படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. தெலுங்கில் 'இண்டிகி தீபம் இல்லாலே' என்ற பெயரில் வெளியானது. இதில் என்.டி.ராமாராவ், கொங்கரா ஜக்கையா மற்றும் சரோஜாதேவி ஆகியோர் நடித்திருந்தனர். ஹிந்தியில் 'யே தில்லகி' பெயரிலும் உருவாக்கப்பட்டது.

இந்த படத்தின் கதை செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களைப் பற்றியதாகும். இதில் மூத்தவர் (அசோகன்) மதுவுக்கு அடிமையானவராகவும், இளையவர் (ராஜேந்திரன்) வெற்றிகரமான மருத்துவராகவும் உள்ளனர். கணவனை இழந்த தாய் (கண்ணம்பா) தனது இரு மகன்கள் மீதும் மிகுந்த அன்பு செலுத்துகிறார்; மதுவுக்கு அடிமையான மூத்த மகனைத் திருத்த முயற்சிக்கிறார். அது முடிந்ததா, சகோதர்களுக்கிடையே வரும் பிரச்னைகள் எப்படி தீர்க்கப்படுகிறது, அவர்கள் வாழ்வில் வரும் பெண்கள் உள்ளிட்டவை தான் படத்தின் கதை. விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அமைத்திருந்தனர்.

தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலுமே பெரிய வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் எம்ஜிஆர், சிவாஜி படங்களுக்கு நிகராக 50 தியேட்டர்களுக்கு மேல் 100 நாளை தாண்டி ஓடியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !