என்னுடன் நடித்தவர்களுக்கு அரசியலில் அதிர்ஷ்டம் : பாலிவுட் நடிகர் பாபி தியோல்
நடிகர் விஜய் நடிப்பில் அவரது கடைசி படமாக ஜனநாயகன் திரைப்படம் நேற்று வெளியானது. இதில் வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார். சமீப காலமாக தென்னிந்திய படங்களில் கவனம் செலுத்தி வரும் பாபி தியோல், பாலகிருஷ்ணாவுடன் தெலுங்கில் டாக்கு மகாராஜ் மற்றும் பவன் கல்யாண் உடன் ஹரிஹர வீர மல்லு உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்திருந்தார்.
ஜனநாயகன் படம் வெளியாகி இருப்பதை ஒட்டி சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “தென்னிந்திய படங்களில் நான் எந்த சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கிறேனோ அவர்கள் அனைவரும் பின்னர் அமைச்சர்களாகி விடுகிறார்கள். பாலகிருஷ்ணா எம்எல்ஏவாக இருக்கிறார். பவன் கல்யாண் ஆந்திராவின் துணை முதலமைச்சராக இருக்கிறார். நடிகர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகவே மாறிவிட்டார்” என்று தன்னுடைய அதிர்ஷ்டம் மற்றவர்களுக்கு எப்படி ஒர்க் அவுட் ஆகிறது என்பது பற்றி வேடிக்கையாக கூறியுள்ளார்.
அதேசமயம் விஜய் குறித்து கூறும்போது, “விஜய் பெரிய அளவில் விளம்பரங்களை விரும்புவதில்லை. தனது உழைப்பு மட்டுமே பேசப்பட வேண்டும் என்று நம்புபவர்: என்றும் கூறியுள்ளார்.