டிசி படத்திற்கு எதிர்பார்ப்பை எகிறவைத்த அனிருத்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், டிசி என்ற ஆக்ஷன் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்தில் வாமிகா கபி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் டீசர், டிரைலரை விட இசையமைப்பாளர் அனிருத் தனது அட்டகாசமான இசையால் இப்படத்தை தொடர்ந்து பேசு பொருளாக வைத்து வருகிறார். டிசி படத்திற்காக அனிருத் தனது சிறந்த இசை ஆல்பங்களில் ஒன்றை வழங்கி இருப்பதாகப் பலரும் கருதுகின்றனர். இப்படத்தின் பல தீம் இசைகள் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் செய்யும் வீடியோ எடிட்களுடன் வைரலாகி வருகின்றன.
அனிருத்தின் இந்த மாஸான இசை, படத்திற்குப் பெரிய அளவிலான ஓப்பனிங்கை பெற்று கொடுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படம் வரும் ஆகஸ்ட் 7 அன்று தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. ராக்கி, சாணிக்காயிதம், கேப்டன் மில்லர் போன்ற ஆக்ஷன் களங்களைக் கொண்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குவதால், இது ஒரு ஆக்ஷன் த்ரில்லராக இருக்கும் என்று தெரிகிறது.
லோகேஷ் கனகராஜ் - அனிருத் கூட்டணி ஏற்கனவே மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களில் மாபெரும் இசை வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், லோகேஷ் கதாநாயகனாக நடிக்கும் முதல் படத்திற்கும் அனிருத்தே இசையமைப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகப்படுத்தியுள்ளது.