முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகர் ஜெய்
நடிகர் விஜய் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிப்பெற்று தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் பலரும் அவரை அவ்வப்போது நேரில் சந்தித்துத் வாழ்த்துகளைத் தெரிவித்துத் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ஜெய் நேற்று முதல்வர் விஜய்யை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, தங்களது நீண்ட கால நட்பைக் குறிக்கும் வகையில் அவருக்குத் மரக்கன்று ஒன்றைப் பரிசளித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், நல்ல விஷயங்கள் நடக்க நேரம் எடுக்கும்.. சிறந்த விஷயங்கள் தங்களின் நேரத்தைத் தாங்களே எடுத்துக் கொள்ளும்” என்று கூறியுள்ளார். அது மட்டுமல்ல, “இது எனது அண்ணனுடன் மிகமிக அன்பான மற்றும் அரவணைப்பான சந்திப்பு ஆகும். நாங்கள் ஒன்றாகச் செலவிட்ட நேரத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். தமிழக மக்களுக்கு சேவை செய்வதில் அவருக்கு நல்ல உடல்நலம், பலம் மற்றும் தொடர்ச்சியாக வெற்றிகள் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஜெய் தனது திரையுலகப் பயணத்தைத் துவங்கியதே விஜய் நடித்த 'பகவதி' திரைப்படத்தில் அவரது தம்பியாக நடித்ததன் மூலம்தான்.. விஜய்யின் தம்பியாக நடித்ததாலேயே ரசிகர்களிடம் சீக்கிரமே பிரபலமானார். தேர்தலுக்கு முன்பாக விஜய்யின் வெற்றிக்கு ஆதரவைத் தெரிவித்திருந்த ஜெய், விஜய் முதல்வராகப் பொறுப்பேற்ற அன்றைய தினம் அந்த விழா மேடையிலும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.