பிளாஷ்பேஷ் : சிவாஜி படத்தை தோற்கடித்த சிவாஜி படம்
1961ம் ஆண்டு வெளிவந்து வெள்ளி விழா கொண்டாடிய படம் 'பாசமலர்'. பீம்சிங் இயக்கினார். அண்ணன் - தங்கை பாசத்திற்கு இன்றைக்கும் உதாரணமாக சொல்லப்படுகிற படம். இதில் அண்ணனாக சிவாஜியும், தங்கையாக சாவித்திரியும் நடித்திருந்தார்கள். இருவரும் உருகி உருகி நடித்த காட்சிகளில் தியேட்டரில் கண்ணீர் ஆறாக ஓடியது. பெண்கள் அலை அலையாய் திரண்டார்கள். பிற்காலத்தில் அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து எந்த படம் வந்தாலும் அதில் இந்த படத்தின் ரெபரன்ஸ் இருக்கும்.
இதே 'பாசமலர்' படம்தான் சிவாஜியின் இன்னொரு படத்தை தோற்கடித்தது. அது இதே ஆண்டில் பாசமலர் வெளியான 3 மாதங்களுக்கு பிறகு வெளிவந்த 'எல்லாம் உனக்காக' என்ற படம். இந்த படத்தில் சிவாஜியும், சாவித்ரியும் காதலர்களாக நடித்தார்கள். கதைப்படி சிவாஜி தன் காதலிக்காக எதையும் செய்பவராக நடித்தார். இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் சுப்பாராவ் இயக்கினார்.
'பாசமலர்' தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும்போதே இந்த படம் வெளிவந்தது. அண்ணன் தங்கையாக சிவாஜி, சாவித்ரியை பார்த்து உருகிய ரசிகர்கள் இருவரையும் காதலன், காதலியாக பார்த்து ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இதனால் படம் தோல்வி அடைந்தது.