லைவ் சவுண்டில் உருவாகும் படம்
புதுமுகம் டி.ஆண்டனி இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள படம் 'ஏன் என்னை ஏதோ செய்தாய்' மதுமிதா தாஸ், ஜீவா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பியட்ரோ வில்லானி ஒளிப்பதிவு செய்கிறார். ஜெய்கார் ஹரிநாத், அசோக் ஸ்ரீதரன் ஜோயி ரிடா இசை அமைத்துள்ளனர்.
படம் குறித்து இயக்குநர் கூறும்போது, “தாயை இழந்து சிறுவயதிலிருந்தே தனிமையில் வளர்ந்து, மதுவுக்கு அடிமையாக இருளில் வாழும் ஒரு இளைஞனின் வாழ்க்கைக்குள் காதல் நுழையும் போது ஏற்படும் மாற்றமே இப்படத்தின் மையக்கரு. இன்றைய தலைமுறையினரின் காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படம், காதலின் மென்மையையும் வாழ்க்கையின் வலியையும் பேசுகிறது.
முழு படமும் 'லைவ் சவுண்ட்' தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளதுடன், அனைத்துப் பாடல்களும் நேரடி இசைக்கருவிகளைக் கொண்டே பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. வருகிற 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.