பிளாஷ்பேக் : ஜம்மு காஷ்மீரில் ‛தேன் நிலவு'
இயக்குனர் ஸ்ரீதர், 'சித்ராலயா' என்று தயாரிப்பு நிறுவனம் தொடங்கியதும் முதலில் 'நெஞ்சில் ஒரு ஆலயம்' படத்தை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. முதல் படமே சோகமாக இருக்க வேண்டாம் என்று ஜனரஞ்சகமாக ஒரு கதையை விவாதிக்க முடிவு செய்தனர். அந்தப் படம்தான் 'தேன் நிலவு'. 'காதல் மன்னன்' ஜெமினி தான் கதாநாயகன். வைஜெயந்திமாலா கதாநாயகி. அப்போது, ஹிந்திப் படங்களில் நடித்து வைஜெயந்தி மாலா மிகவும் பிரபலம் ஆகியிருந்தார். எம்.என். நம்பியார், தங்கவேலு, எம்.சரோஜா, பி.ஏ.வசந்தி ஆகியோர் நடித்தனர். 'கல்யாண பரிசு' படத்துக்கு ஹிட் பாடல்களைத் தந்த ஏ.எம். ராஜாதான் இசையமைப்பாளர்.
காஷ்மீரில் இரண்டு மாதங்களுக்குப் படப்பிடிப்பை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. காஷ்மீர் குளிரை தங்களால் தாங்க முடியாது என்று நடிகர், நடிகைகள் தயங்கியபோது குடும்பத்தினருடன் நடிகர்கள் காஷ்மீர் வரலாம் என்ற சலுகையும் வழங்கப்பட்டது.
படப்பிடிப்பைத் தொடங்கிய முதல் நாளே பிரச்னை தலைதூக்கியது. காரணம், வைஜெயந்திமாலா. அப்போது அவர் மிகவும் பிரபலம். காஷ்மீர் பள்ளத்தாக்கின் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் அவரைக் காண கூட்டம் கூட்டமாக வந்தனர்; “வைஜெந்தி ...வைஜெந்தி!” என்று கத்திக்கொண்டே இருந்தார்கள். போலீசைக் கொண்டு ரசிகர்களை அப்புறப்படுத்திய பிறகே படப்பிடிப்பு நடந்தது.
ஸ்ரீதர் எந்த படம் இயக்கினாலும் அன்றைக்கு எடுத்த காட்சிகளை அன்றைக்கு பார்த்து விடுவது அவரது வழக்கம். ஆனால் காஷ்மீரில் அதற்கான வசதிகள் இல்லை. ஜம்முவில் இருந்து தொலைவான ஒரு கிராமத்தில் படப்பிடிப்பு நடந்தது. அங்கு ஒரே ஒரு தியேட்டர் தான் இருந்தது இதனால் படமாக்கப்பட்ட காட்சிகளை விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைத்து அங்கு பிரசாத் லேபில் ப்ராசஸ் செய்யப்பட்டு பின்னர் மீண்டும் ஜம்முவுக்கு கொண்டு வரப்பட்டு அந்த கிராமத்தில் உள்ள தியேட்டரில் போட்டு பார்த்த பிறகு மற்ற காட்சிகளை படமாக்கினார்.
தேனிலவு படத்தின் 50 சதவீத காட்சிகள் காஷ்மீரிலும் 30 சதவிகித காட்சிகள் ஸ்டூடியோவிலும் 20 சதவீத காட்சிகள் காஷ்மீரை தொடர்பு படுத்தும் விதமாக கொடைக்கானலிலும் எடுக்கப்பட்டது.