‛ரைட்டர்' இயக்குனரின் அடுத்தபடம் துவக்கம் : பிரபு, விஜய் வர்மா நடிக்கின்றனர்
2021ல் சமுத்திரகனி நடிப்பில் வெளியான படம் ‛ரைட்டர்' இதை பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கினார். அடுத்து இவர் ஒரு புதிய படத்தை இயக்குகிறார். இதில் நடிகர் பிரபு முதன்மை வேடத்தில் நடிக்க அவருடன் நடன கலைஞரும், பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்றுவருமான விஜய் வர்மா ஹீரோவாக நடிக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்து, இவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
முத்து குமார், ரமேஷ் திலக், திலீப் சுப்பராயன், தீனா, அருண் மாதேஸ்வரன், கவிதா பாரதி மற்றும் அவினாஷ் ரகுதேவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். டார்க் ஹியூமர் ஜானரில், வித்தியாசமான கதைக்களத்தில் திரில்லர், காமெடி திரைப்படமாக உருவாக உள்ளது. படத்தில் பூஜையில் அருண் மாதேஸ்வரன், ராம் உள்ளிட்ட இயக்குனர்களும் பங்கேற்றனர்.
நடிகர் பிரபு கூறியதாவது, ‛‛பிராங்க்ளின் ஒரு அருமையான கதையைச் சொன்னார். இப்படியொரு வித்தியாசமான படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது'' என்றார்.
நடிகர் விஜய் வர்மா பேசியதாவது, “இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த ப்ராஜெக்ட் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பயணத்தில் நானும் ஒரு பகுதியாக இருந்திருக்கிறேன்” என்றார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் சென்னையில் தொடங்குகிறது. படத்தின் தலைப்பு மற்றும் இதர தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.