46 வருடம் முன்பு தான் நடித்த பட டைட்டிலிலேயே மீண்டும் நடிக்கும் மம்முட்டி
இந்த வருட துவக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான 'தலைவர் தம்பி தலைமையில்' மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தை மலையாள இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இயக்கியிருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக மம்முட்டி படத்தை இயக்குகிறார் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. தற்போது மம்முட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்திற்கு 'மேளா' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இதில் என்ன ஆச்சரியம் என்றால் 1980ல் மலையாளத்தில் கேஜி ஜார்ஜ் இயக்கத்தில் மேளா என்கிற படம் வெளியானது. இந்த படத்தில் மம்முட்டி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கதாநாயகன் அந்தஸ்து பெற அவர் போராடிக்கொண்டு இருந்த காலகட்டத்தில் வெளியான இந்த படம் அவரது திரையுலக பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் 46 வருடங்களுக்கு பிறகு அவர் நடித்த படத்தின் டைட்டிலையே மீண்டும் தேர்ந்தெடுத்ததற்கு காரணம் இந்த படத்தில் மம்முட்டியின் கதாபாத்திரத்தின் கம்பீரத்தன்மை தான் என்றும் அதேசமயம் இது அந்த முந்தைய படத்தின் தொடர்ச்சி அல்ல என்றும் கூறியுள்ளார் இயக்குனர் நிதிஷ் சகாதேவ்.
இப்படி தனது பட டைட்டிலிலேயே ஒரு நடிகர் மீண்டும் நடிப்பது இது முதல் தடவை அல்ல.. இதற்கு முன்பு கமல்ஹாசன் 1986ல் தான் நடித்த 'விக்ரம்' படத்தின் டைட்டிலேயே 36 வருடம் கழித்து 2022ல் லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் நடித்த படத்திற்கு பயன்படுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.