உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதல் படத்துக்கும், ரீ என்ட்ரி படத்துக்கும் இளையராஜாவே இசை: ரோஜா

முதல் படத்துக்கும், ரீ என்ட்ரி படத்துக்கும் இளையராஜாவே இசை: ரோஜா


சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், டி.டி.பாலச்சந்திரன் எழுதி இயக்கியுள்ள படம் 'லெனின் பாண்டியன்'. கங்கை அமரன், ரோஜா ஜோடியுடன் சிவாஜி பேரன் தர்ஷன் கணேசன், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட், ஜார்ஜ் மரியன், அர்ச்சனா, சுப்பு பஞ்சு நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். செப்.,25ல் ரிலீசாகிறது.

சென்னையில் நடந்த 'லெனின் பாண்டியன்' பட விழாவில் நடிகை ரோஜா பேசியதாவது: என்னுடைய முதல் படம் 'செம்பருத்தி'. இப்போது “லெனின் பாண்டியன்” மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறேன். 30, 35 ஆண்டுகள் நீண்ட பயணம் என்று நீங்கள் சொல்லும்போதுதான், இவ்வளவு நீண்ட பயணத்தை நான் இவ்வளவு எளிதாகக் கடந்து வந்திருக்கிறேனா என்று தோன்றுகிறது. எந்த ஒரு காட்பாதரின் பின்புலமும் இல்லாமல் சினிமா மற்றும் அரசியல் என இரண்டு துறைகளிலும் பயணிக்க முடிந்ததற்கு கடவுளுக்கு நன்றி. என்னுடைய முதல் படத்துக்கு இசையமைத்த இளையராஜா சாரே, என்னுடைய ரீ-என்ட்ரி படத்துக்கும் இசையமைத்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகை.

இந்தப் படத்தில் நான் நடிப்பதற்கு முக்கியக் காரணம் சுப்பு. நாங்கள் நீண்ட கால நண்பர்கள். நான் அரசியலுக்குச் சென்ற பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேன். அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வந்தேன். அப்போது சுப்பு இந்தப் படத்தின் கதையைப் பற்றி கூறினார். இயக்குநர் பாலச்சந்திரன் எங்கள் வீட்டுக்கு வந்து கதை சொன்னபோது, அவர் கதை சொன்ன விதத்திலேயே நான் முழுப் படத்தையும் பார்த்துவிட்டேன். ஒவ்வொரு கதாபாத்திரம் எப்படி நடிக்க வேண்டும், வசனங்களை எப்படி பேச வேண்டும், உடல்மொழி எப்படி இருக்க வேண்டும் என்பது வரை அவர் விவரித்த விதம் என்னை மிகவும் கவர்ந்தது. அந்தப் படத்தின் மீதான அவருடைய ஆர்வமும், பார்வையும் என்னை மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தியது.

சிவாஜி சார் குடும்பத்தின் மூன்று தலைமுறையினருடனும் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. சிவாஜி சார், பிரபு சார் ஆகியோருடன் நடித்துள்ள நான், இப்போது தர்ஷனுடனும் நடித்திருக்கிறேன். அந்தக் குடும்பத்தினர் எப்போதும் என்னை ஒரு குடும்பத்தில் ஒருவரைப் போல அன்பாகவும், ஆதரவாகவும் நடத்துவார்கள். அவர்களுடன் பணியாற்றுவதில் இன்னொரு சிறப்பும் இருக்கிறது; படப்பிடிப்பு தொடங்கியது முதல் முடியும் வரை வீட்டுச் சாப்பாடு கிடைக்கும். கங்கை அமரன் சாருடன் இணைந்து நடித்திருப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பல படங்களுக்கு இசையமைத்தும், இயக்கியும் இருக்கும் அவர், இந்தப் படத்தில் அனுபவம் வாய்ந்த நடிகரைப் போல மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்.

“லெனின் பாண்டியன்” என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். பாரதிராஜா சார் படங்களைப் பார்க்கும்போது நமக்குள் ஏற்படும் உணர்வைப் போல, இந்தப் படத்தைப் பார்த்து வெளியே வரும்போதும் ரசிகர்கள் கதையுடன் உணர்வுபூர்வமாக இணைந்திருப்பார்கள்.

தர்ஷன் கணேசன் குறித்து குறிப்பாகச் சொல்ல வேண்டும். சிவாஜி சார் குடும்பத்திலிருந்து வந்தவர் என்ற எந்தவித கர்வமும் இல்லாமல், முதல் படத்தில் நடிக்கும் ஒரு சாதாரண நடிகரைப் போல மிகவும் எளிமையாகப் பழகினார். சக நடிகர்கள் நடிப்பதைப் பார்த்து அதற்கேற்றபடி ரியாக்ட் செய்வது, அனைவருடனும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது, வெயிலில் படக்குழுவினருடன் இருப்பது என அவர் மிகவும் இயல்பாக இருந்தார். முன்பெல்லாம் படப்பிடிப்பு தளத்தில் ஒரு குடும்பம் போன்ற சூழல் இருக்கும். தற்போது அது குறைந்து வரும் நிலையில், “லெனின் பாண்டியன்” படப்பிடிப்பில் மீண்டும் அந்த குடும்ப உணர்வை அனுபவித்தேன். இவ்வாறு அவர் கூறினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !