வாசகர்கள் கருத்துகள் (1)
சூர்யா என்றால் வெறுப்பு ஏன் வன்முறை நிறைந்த படங்களை விட இது சிறந்த படம் தான்
தயாரிப்பு : சித்தாரா என்டர்டெயின்ட்மென்ட்ஸ்
இயக்கம் : வெங்கி அட்லுாரி
நடிப்பு : சூர்யா, மமிதா பைஜூ, ரவீனா டண்டன், ராதிகா
ஒளிப்பதிவு : நிமேஷ்ரவி
இசை : ஜி.வி.பிரகாஷ்குமார்
வெளியான தேதி : ஆகஸ்ட் 14, 2026
நேரம் : 2 மணிநேரம் 41 நிமிடம்
ரேட்டிங் : 2.5 /5
தொழிலதிபரான சூர்யா சில காரணங்களால் 40 வயதை தாண்டியும் திருமணம் செய்யாமல் இருக்கிறார். நம்ம குடும்பத்துக்கு வாரிசு வேணும். நீ கல்யாணம் பண்ணு என சூர்யாவை நச்சரிக்கிறார் அம்மா ராதிகா. அமெரிக்கா சென்று வாடகை தாய் முறையில் ஒரு குழந்தையை உருவாக்கி, இந்தியா அழைத்து வருகிறார். அந்த குழந்தைக்கு ஒரு பிரச்னை வர, அமெரிக்க சென்று அந்த குழந்தையை கர்ப்பத்தில் சுமந்த வாடகை தாய் மமிதா பைஜூவை தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார். ஒரு கட்டத்தில் சூர்யாவை மமிதா திருமணம் செய்ய ஆசைப்பட அது நடந்ததா? குழந்தைக்காக சூர்யா என்ன முடிவெடுக்கிறார் என்பது விஸ்வநாத் அண்ட் சன்ஸ் கதை.
வாத்தி, லக்கி பாஸ்கர் பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி இருக்கிறார். நடுத்தர வயது தொழிலதிபராக, அம்மா பாசம் உடையவராக, மமிதாவுடன் அவ்வப்போது சண்டை போடுபவராக நிறைய இடங்களில் ஸ்கோர் செய்து இருக்கிறார் சூர்யா. பல சீன்களில் கம்பீரமாக, அழகாக இருக்கிறார். குறிப்பாக மமிதாவுக்கும் அவருக்குமான சீன் கலகலப்பு. ராதிகா, சூர்யா அம்மா பாச சீன் டச்சிங். முதற்பாதி முழுக்க குழந்தை வளர்ப்பு , மமிதா குறும்பு, எமோசன் என வேகமாக செல்கிறது.
படத்தில் பெரிய பிளஸ் மமிதா. அமெரிக்கா, சென்னை என இரண்டு இடத்திலும் கலக்குகிறார். சின்ன சின்ன எக்ஸ்பிரசனில் லைக் அள்ளுகிறார். பிரமாதமாக டான்ஸ் ஆடுகிறார். கிளைமாக்சில், இன்னும் சில இடங்களில் நடிப்பில் கவர்கிறார். அவருக்கு எவ்வளவு எனர்ஜி. சற்றே வித்தியாசமான பாலசந்தர் ஸ்டைல் காதல் கதை என்றாலும் நாகரீகமாக சொல்லி இருக்கிறார். எங்கேயும் முகம் சுளிக்க வைக்கவில்லை. சின்ன சின்ன வசனங்கள், ஜார்ஜ் மரியான் சீன்கள் ஈர்க்கிறது.
பாசக்கார அம்மாவாக பல இடங்களில் மனதில் நிற்கிறார் ராதிகா. அவருக்கும் மமிதாவுக்குமான பல சீன்கள் பிரஷ். இவர்களை தவிர இடைவேளைக்குபின் ஒரு முக்கியமான கேரக்டரில் ரவீனா டண்டன், நாசர், மைம் கோபி, காளி வெங்கட் என பலர் வருகிறார்கள். ஆனால் அவர்கள் கேரக்டர், நடிப்பு கதையுடன் ஒட்டவில்லை
முதல் பாதியில் இருந்த பரபரப்பு, விறுவிறுப்பு அடுத்த பாதியில் மிஸ்சிங். இரண்டாம் பாதி கதை, குழந்தையை விட்டு நகர்கிறது. சூர்யா அப்பாவின் இரண்டாவது மனைவி, தங்கை பவானிஸ்ரீ, அவர் கல்யாண ஏற்பாடு, அரசியல், வில்லன், சண்டை என கதை வேறு திசைக்கு நகர்கிறது. அதுக்கும் இந்த படத்தின் கருவுக்கும் சம்பந்தம் இல்லை. ஓவர் சென்டிமென்ட், ஓவர் செயற்கைத்தனத்தால் நெளிய வைக்கிறது. திறமைசாலி நடிகரான நாசரை கூட வீணடித்துள்ளனர்.
நிமேஷ் கேமரா வொர்க் படத்தை ரிச் ஆக காண்பித்தது இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசை ஓகே ரகம். பாடல்கள் கை கொடுக்கவில்லை. குழந்தை கதை, அந்த குழந்தை சேட்டை, குறும்புக்கு முக்கியத்துவம் இல்லை. அதுவும் ஏமாற்றம்.
42 வயது ஹீரோவை, தனது குழந்தையின் அப்பாவை காதலிக்கும் 22 வயதான ஒரு டாக்டருக்கு படிக்கும் பெண்ணின் காதல். அருமையான நாட். ஆனால் திரைக்கதையில் சொதப்பி இருக்கிறார். இந்த காதலை ஆரம்பத்தில் சரியாக சொன்னாலும் அப்புறம் போரடிக்க வைக்கிறார். கிளைமாக்சில் என்ன சொல்லி இருக்கிறார். என்ன சொல்ல வருகிறார் என்பதிலும் குழப்பம். கருப்பு மாதிரியான படத்தை ரசித்த சூர்யா ரசிகர்களுக்கு அவர் நடிப்பு தவிர வேறு எண்டர்டெயின்மெண்ட் இல்லை. அதிலும் இடைவேளைக்குபின் சூர்யா நடிப்பிலும் சினிமாத்தனம். படம் ரிச் ஆக தெரிகிறது. ஆனால் விசில் சத்தம், கைதட்டல், ஆரவாரம் இல்லாமல் அமைதியாக குடும்ப கதையாக, எமோசனல் ஆக செல்கிறது.
ஹீரோயின் படிப்பு ஒரு ஆண்டில் முடிகிறது என டயலாக் வருகிறது. ஆனால் அவர் பையன் ஸ்கூல் போகும் வரை படித்து கொண்டே இருக்கிறார். பொதுவாக வாடடை தாய் ஆக இருப்பவரை வெளியில் சொல்ல மாட்டார்கள். இதில் லாஜிக் மீறல் என்றாலும் டாக்டருக்கு படிப்பவர் அந்த வேலையை செய்ய ஓகே சொல்வாரா என பல கேள்விகள். அப்பா, சித்தி, அவர் மகள், அந்த திருமணம் இதெல்லாம் இந்த கதைக்கு ஏன், நேரம் விரயமாச்சே என்ற கேள்வி எல்லாருடைய மனதிலும் எழுகிறது.
பாடல், காமெடி, ரசிகர்கள் விரும்பும் கமர்சியல் விஷயங்கள் குறைவு. முழு படத்தையும் சூர்யா தான் சுமக்கிறார். ஒரு கட்டத்தில் சினிமாவில் சீரியல் வாடை வந்துவிடுவதும் மைன்ஸ். குடும்ப கதை விரும்புகிறவர்களுக்கு, சூர்யா தீவிர ரசிகர்களுக்கு பிடிக்கும். கருப்பு நினைப்பில் போனால் வெறுப்பு வரும்.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் - ஓவர் சென்டிமென்ட்
சூர்யா என்றால் வெறுப்பு ஏன் வன்முறை நிறைந்த படங்களை விட இது சிறந்த படம் தான்