உள்ளூர் செய்திகள்

மகுடம்

தயாரிப்பு : சூப்பர்குட் பிலிம்ஸ்
இயக்கம் : விஷால்
நடிப்பு : விஷால், அஞ்சலி, துஷாரா விஜயன், ஜான் விஜய், தம்பி ராமையா
ஒளிப்பதிவு : ரிச்சர்ட் எம்.நாதன். அபி நந்தன்
இசை : ஜி.வி.பிரகாஷ்
வெளியான தேதி : ஆகஸ்ட் 14, 2026
நேரம் : 3 மணிநேரம் 05 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5

சென்னையில் மெடிக்கல் ரெப் ஆக இருக்கும் விஷாலின் மனைவி துஷாரா விஜயன் மற்றும் மகளை ஒரு கார் பயணத்தில் கொல்கிறது வில்லன் கும்பல். தனது மகனுடன் தப்பிக்கும் விஷால், இந்த தாக்குதலுக்கு காரணம் வைசாக்கில் தாதாவாக இருக்கும் தனது அப்பா செயல்பாடுகள் (அவரும் விஷால்) என நினைக்கிறார். அந்த விஷால் எப்படி தாதா ஆனார். அவர் மனைவி அஞ்சலிக்கு என்ன நடந்தது? அதற்கு காரணம் என்ன? கடைசியில் மகனை காப்பாற்றி வில்லன்கள் சதி திட்டத்தை அப்பா முறியடித்தாரா? அப்பாவின் பாசத்தை, தியாகத்தை உணர்ந்த மகன் என்ன செய்கிறார் என்பது மகுடம் படக்கதை. அப்பா, மகன் என இரண்டு கேரக்டர், 3 கெட் அப்பில் நடித்து, முதன் முறையாக விஷாலே இயக்கி இருக்கிறார்.

சென்னையில் மாமனார் தம்பி ராமையா, மனைவி துஷாரா விஜயன், இரண்டு குழந்தைகளுடன் நேர்மையாக வாழும் விஷாலுக்கு ஒரு கார் வாங்க ஆசை. அதற்கு பல தடைகள். ஒரு வழியாக செகனண்ட் கார் வாங்கி குடும்பத்துடன் டூர் போகிறார். அப்போது வில்லன் கும்பல் தாக்குதல் நடத்த, அதில் உயிரிழப்பு ஏற்பட யாருப்பா இவங்க என விஷால் மகன் கேட்க, தனது அப்பா பற்றி விஷால் சொல்ல, வைசாக் பிளாஷ்பேக் கதை விரிகிறது. அடுத்து முழுக்க முழுக்க சண்டை, ரத்தம், வெட்டு, குத்தம், பழி வாங்கல்தான்.

மெடிக்கல் ரெப், பாசக்கார நடுத்தர குடும்பத் தலைவன், இஎம்ஐ , கார் மோகம் என முதல் பாதி சுமாராக, அமைதியாக நகர்கிறது. விஷாலின் அப்பாவிதனம் கலந்த நடிப்பு , குடும்ப பாசம் கியூட். துஷாரா நடிப்பும் ஓகே ஆனால், மாமனாராக வரும் தம்பி ராமையா நடிப்பு ஓவர் ஆக்டிங். கொஞ்சம் வாய்ஸ் வால்யூம் குறைங்க சார். காது வலிக்கிறது.

என்னடா விஷால் இயக்கிய படம் இப்படி டல் ஆக போகிறதே என நினைக்கும் போது அப்பா விஷால் என்ட்ரி ஆகிறார். அவர் வயதான கெட் அப், அவர் செய்யும் செய்கைகள், அந்த குரல், அவர் பாலிசி, அவரின் முரட்டு குணம் ஓகே. ஆனாலும் இன்னும் மிரட்டி இருக்கலாம். கெட் அப் மாதிரி நடிப்பில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். சில இடங்களில் நடிக்காமல் அமைதி ஆக இருக்கிறார். கிளைமாக்சில் மட்டும் சில நிமிடம் ருத்ர தாண்டவம் ஆடுகிறார்.

படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது அஞ்சலி கேரக்டர், அவரின் நடிப்பு, டான்ஸ். அப்பா விஷால் காதலியாக, மனைவியாக, மீன் விற்பவராக கலக்கி இருக்கிறார். அவரின் காதல் காட்சிகள் மட்டுமல்ல, ஆக் ஷன் காட்சிகளும் அசத்தல். அப்புறம் அந்த குத்து பாட்டு கலக்கல். கொஞ்சம் வெயிட் போட்டவராக, கொஞ்சம் வயதானவராக தெரிவது மைனஸ். மேக்கப், ஒளிப்பதிவில் அதை சரி செய்து இருக்க வேண்டும்.

நடிகர்களில் அப்பா விஷால் விசுவாசியாக வரும் ஜெயபிரகாஷ் கவனிக்க வைக்கிறார். வில்லன் பதம் குமார் அமைதியாக மிரட்டி இருக்கிறார். இவ்வளவு பெரிய ஆக் ஷன் கதையில் போலீசுக்கு அதிக வேலை இல்லாதது காமெடி.

வில்லன்கள் ஏகப்பட்டபேர் இருக்கிறார்கள். அவர்களின் அடியாட்கள் நூற்றுக்கணக்கானபேர் இருக்கிறார்கள். வழக்கம்போல் அப்பா, மகன் என இரண்டு ஹீரோக்களிடம் அடி வாங்கி விழுகிறார்கள், சாகிறார்கள்.

ஆக்ஷன் காட்சிகளில் ரிச்சர்ட், அபி ஒளிப்பதிவு பரபர. பெரும்பாலான காட்சிகளை பைட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் கம்போஸ் செய்து இருக்கிறாரோ என சொல்லும் அளவுக்கு இடைவேளைக்குபின் துரத்தி கொண்டே இருக்கிறார்கள் அல்லது சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். பல ஆக்ஷன் ராவாக இருக்கிறது. ஆனாலும் அவர் பங்களிப்பை பாராட்டலாம்.

கிளைமாக்சில் இளையராஜாவின் முத்துமணி மாலை பாடலை பாடிக் கொண்டே அப்பா விஷால் ஸ்டைல் ஆக சண்டை போடுவது கவனிக்க வைக்கிறது. அதேபோல் கிளைமாக்சில் நூற்றுக்கணக்கான மீனவ பெண்கள் ஆக்ரோசமாக பாடிக்கொண்டே வில்லன் டீமை அடித்து துவைப்பது விஷால் டச்.

அஞ்சலி குத்து பாட்டில் மட்டும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் திறமை தெரிகிறது, மற்ற இடங்கள் சுமார்.

நடிகராக 3 கெட் அப்பில் பாஸ் மார்க் வாங்கும் விஷால், இயக்குனராக பாஸ் ஆக திணறுகிறார். ஆக்ஷன், சென்டிமென்ட் நம்பி கதை நகர்த்தி இருக்கிறார். ஆனால் பட இடங்கள் போரடிகிறது. தான் சண்டை போடுவது, தன் கேரக்டர் பில்டப் ஆக இருப்பது டைரக்சன் என நினைத்து விட்டார் போலும். அதிலும் கடைசியில் ஊர் மக்கள் அவரிடம் கெஞ்சுவது ஓவர். 3 மணி நேரம் படம் எப்படா முடியும் என்ற அயர்ச்சி வருகிறது. முதல் பாதி கதையில் விறுவிறுப்பு இல்லை. அடுத்த பாதியில் வன்முறை அதிகம். சில இடங்களில் ஆர்வக்கோளாறு தனமாக இஷ்டத்துக்கு எடுத்து தள்ளி இருக்கிறார். சீனாவில் இருந்து வரும் போலி வாகன உதிரி பாகத்துக்கு எதிரான கதையை சிந்தித்த விஷால் அதை சரியாக சொல்ல தடுமாறி இருக்கிறார். இப்போதைக்கு நடிப்பில் கவனம் செலுத்துங்கள் இன்னும் பயிற்சி பெற்று டைரக்சன் பண்ணலாம். கொஞ்ச காலம் கழித்து அந்த மகுடத்துக்கு ஆசைப்படுங்க என விஷாலுக்கு மகுடம் ரிசல்ட்டும் சொல்லாமல் சொல்கிறது

மகுடம்.... சூட இன்னும் தேவை பயிற்சி



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !