PUBLISHED ON : ஜூலை 13, 2024 12:00 AM

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி, மாநிலம் முழுதும் மின்வாரிய பணியாளர்கள் காத்திருப்பு
போராட்டத்தை துவங்கி உள்ளனர். ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது,
இதே கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினார். அப்போது நியாயமாக தெரிந்த
கோரிக்கைகளை இப்போது நிறைவேற்ற மறுப்பது கண்டிக்கத்தக்கது.
அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்தப்ப கொடுத்த வாக்குறுதியும், போராட்டங்களுக்கு தெரிவித்த ஆதரவும் கொஞ்சம், நஞ்சமில்லையே!
முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: பாரத போர் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையிலான பங்காளி சண்டை தான்.
அதில் பஞ்சாயத்து செய்ய போன, பகவான் கண்ணனே பாண்டவர்களுக்கு குருவாக இருந்து, போரை வழிநடத்தும் சூழல் எழுந்தது. பாண்டவர்களுக்கு ஒரு கிராமத்தையாவது ஒதுக்கிக் கொடுங்கள் என, எவ்வளவோ இறங்கி வந்து, கண்ணன் சமாதானம் செய்ய முயற்சித்தும், அதை ஏற்க மறுத்து, ஆணவத்தின் உச்சியில் நின்ற துச்சாதன படைகள், மொத்தத்தையும் இழந்து முடிந்து போயினர். ராணுவத்தால் அழிந்தவர்களை விட, ஆணவத்தில் அழிந்தவர்கள் அதிகம் தானே.
ராமாயணத்தை எல்லாம் உதாரணம் காட்டுறார்... 'பழனிசாமி அண்டு கோ' இவங்க தலைவருக்கு கதவை திறக்கிற மாதிரி தெரியலையே!
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'செஸ் ஒலிம்பியாட் போட்டி, கேலோ இந்தியா விளையாட்டு போட்டி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள், தமிழகம் பாதுகாப்பான மாநிலம் என்பதால் தான் நடக்கின்றன' என, சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். வெட்டு, குத்து, கொலை, கொள்ளை போன்றவை போட்டி போட்டு விளையாட்டாய் பாதுகாப்பாக நடக்கும் மாநிலம் தமிழகம் என்பதற்கு பெயர் தான் திராவிட மாடலோ?
இதெல்லாம் ரொம்ப ஓவர்... பா.ஜ., ஆளும் வடமாநிலங்களில் வெட்டு, குத்து, கொள்ளையோட அடிக்கடி துப்பாக்கி சத்தமும் கேட்க தானே செய்யுது!
ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் அறிக்கை: மூன்று குற்றவியல் சட்டங்களில், மாநில அளவில் திருத்தங்கள் செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் குழுவை, முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ளார். இக்குழு மாநில அரசிடம் அறிக்கை அளிக்கும். நீட் தேர்வை ரத்து செய்வோம் எனக்கூறி ஆட்சிக்கு வந்து, குழு அமைத்து, நீட் தேர்வை ரத்து செய்யாதது போல், இது ஒரு கண்துடைப்பு நாடகம்.
குழு அமைப்பதெல்லாம், 'சட்டத்தை அப்படியே ஏத்துக்காம, நாங்களும் ஆராய்ந்தோம்'னு சரித்திரம் பேச மட்டுமே!