பெங்களூரின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ராஜ்யசபாவில் தேவகவுடா வலியுறுத்தல்
பெங்களூரின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ராஜ்யசபாவில் தேவகவுடா வலியுறுத்தல்
பெங்களூரின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ராஜ்யசபாவில் தேவகவுடா வலியுறுத்தல்
ADDED : ஜூலை 30, 2024 07:31 AM

''பெங்களூரில் குடிநீர் பிரச்னை உள்ளது. இதைத் தீர்த்து வையுங்கள்,'' என, ம.ஜ.த., - எம்.பி., தேவகவுடா, ராஜ்யசபாவில் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக, ராஜ்யசபா கூட்டத்தில் அவர் பேசியதாவது:
நான் யாரையும் விமர்சிக்க விரும்பவில்லை. மத்திய நிதித்துறை அமைச்சர், கர்நாடகாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர். பெங்களூரில் குடிநீர் பிரச்னையால், மக்கள் அவதிப்படுகின்றனர். இந்த பிரச்னைக்கு மத்திய அமைச்சர்கள் தீர்வு காண வேண்டும்.
அடுத்த பட்ஜெட் தாக்கலின்போது, நான் இருப்பேனா, இல்லையா என்பது தெரியாது. நான் பதவியில் இருந்தபோது, பெங்களூரின் பல பிரச்னைகளை தீர்த்து வைத்தேன். அதே போன்று குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். மக்கள் குடிநீர் கிடைக்காமல் அல்லல்படுகின்றனர்.
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும்படி, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. தற்போது மழை பெய்ததால் அனைத்தும் சுமூகமானது. மழை பெய்திருக்காவிட்டால் கதி என்ன? பழைய மைசூரு பகுதிக்கும், பெங்களூருக்கும் காவிரி நீரே ஜீவநாடியாக உள்ளது. குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணவே, தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு மக்கள் ஆதரவளித்தனர்.
நான் விவசாயம், வேலையில்லா திண்டாட்டம் பிரச்னைகளை பற்றி பேசுகிறேன். திறமையானவரை மத்திய அரசு, விவசாயத்துறை அமைச்சராக்கினர். அனுபவம் உள்ளவர்களை தேர்வு செய்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது, பல வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தினார். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டால், குஜராத் முன் மாதிரி மாநிலமாக இருந்தது.
நான் பதவியில் இருந்தபோது, விவசாயத்தை ஊக்கப்படுத்தினேன். வேலை வாய்ப்பை அதிகரிப்பதில், இன்றைய மத்திய அரசு ஆர்வம் காண்பிக்கிறது. கூட்டணி அரசை முன் நடத்துவது, மிகவும் கஷ்டமான விஷயமாகும். நானும் கூட்டணி அரசை நடத்தியுள்ளேன். பிரதமர் மோடி, யாருடனும் சமரசம் செய்யாமல், பொறுப்புணர்ந்து செயல்படுகிறார்.
கர்நாடகாவில் எங்கள் கட்சிக்கு, வெறும் இரண்டு தொகுதிகள் மட்டுமே உள்ளன. ஆனால் எங்களின் சேவையை கருதி, கேபினட்டில் இடம் கொடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நமது நிருபர் -