வால்மீகி ஆணைய முறைகேடுக்கு காரணம் யார்? சமூக நலத்துறையிடம் பரபரப்பு அறிக்கை தாக்கல்
வால்மீகி ஆணைய முறைகேடுக்கு காரணம் யார்? சமூக நலத்துறையிடம் பரபரப்பு அறிக்கை தாக்கல்
வால்மீகி ஆணைய முறைகேடுக்கு காரணம் யார்? சமூக நலத்துறையிடம் பரபரப்பு அறிக்கை தாக்கல்
ADDED : ஜூலை 30, 2024 07:32 AM
பெங்களூரு: 'வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில், 89.63 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததற்கு, முந்தைய நிர்வாக இயக்குனர் பத்மநாபா காரணம்' என, சமூக நலத்துறையிடம் ஆணையத்தின் தற்காலிக நிர்வாக இயக்குனர் அறிக்கை அளித்துள்ளார்.
கர்நாடக வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு, இரண்டு மாதங்களாக மாநில அரசியலில் பெரும் சூறாவளியை கிளப்பி வருகிறது. ஆணையத்தின் கோடிக்கணக்கான ரூபாய் ரொக்கம், சட்டவிரோதமாக வெளி மாநிலத்தின் கூட்டுறவு வங்கிகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டது. அங்கிருந்து பார்கள், தங்க நகைக்கடைகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
எதிர்க்கட்சிகள்
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய ஆணைய தற்காலிக நிர்வாக இயக்குனர் ராஜ்குமார், சமூக நலத்துறை கூடுதல் தலைமை செயலரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார்.
அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
யூனியன் வங்கியின் எம்.ஜி., ரோடு கிளையில் இருந்த, வால்மீகி ஆணையத்தின் பணம், 2024 மார்ச் 5 முதல் மே 6 வரை அடையாளம் தெரியாத நபர்களால் எடுக்கப்பட்டு உள்ளது. இதை கவனிக்காமல் ஆணையத்தின் அன்றைய நிர்வாக இயக்குனர் பத்மநாபா கடமை தவறியுள்ளார். பணம் சட்டவிரோதமாக வேறு கணக்குகளுக்கு, பரிமாற்றம் செய்யவும் இவரே தான் காரணம்.
நிதித்துறை உத்தரவு
அனைத்து ஆணையங்கள், வெவ்வேறு வங்கிகளில் வைத்துள்ள பணத்தை, பி.டி., கணக்குக்கு மாற்றி, அதிலிருந்து செலவிடும்படி, நிதித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை பத்மநாபா பின்பற்றவில்லை. பெருமளவில் பணம் தவறாக பயன்படுத்தப்பட காரணமாக இருந்துள்ளார்.
வசந்தநகரின் யூனியன் வங்கிக் கிளையில் இருந்த, ஆணையத்தின் பணத்தை, அரசின் அனுமதி பெறாமல், எம்.ஜி., ரோடு வங்கிக் கிளைக்கு மாற்றும்படி, வங்கிக் கிளைக்கு பத்மநாபா கடிதம் எழுதியது சட்டவிரோதம்.
சித்தய்யா ரோடு, வாணி விலாஸ் ரோட்டில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கிக் கிளைகளில், ஆணையத்தின் கணக்கில் இருந்தும், கருவூலத்தில் இருந்தும் 187.33 கோடி ரூபாயை, எம்.ஜி., ரோட்டின் கிளைக்கு மாற்ற, அரசிடம் அனுமதி பெறவில்லை.
'கங்கா கல்யாணா' திட்டத்துக்கு வழங்க வேண்டிய, 43.33 கோடி ரூபாயை, அரசு உத்தரவை மீறி, எம்.ஜி., ரோடு கிளைக்கு மாற்றி உள்ளனர். நிர்ணயித்த நேரத்தில், வளர்ச்சிப் பணிகளை முடித்து, நிதியாண்டின் இறுதியில் கணக்கு காண்பிக்க வேண்டும். மிச்சமுள்ள நிதியை நிதித்துறையிடம் திரும்ப ஒப்படைப்பது, நிர்வாக இயக்குனரின் கடமை.
ஓவர் டிராப்ட்
கடன் வாங்க ஆணையத்துக்கு அனுமதியில்லை. ஆனால் பத்மநாபாவும், கணக்கு அதிகாரியும் கையெழுத்திட்டு 44.62 கோடி ரூபாய் 'ஓவர் டிராப்ட்' பெற்றுள்ளனர். எம்.ஜி., ரோட்டின் வங்கிக் கிளையில் இருந்த 89.63 கோடி ரூபாயை, நிர்வாக இயக்குனரும், கணக்கு அதிகாரியும் கையெழுத்திட்டு, சட்டவிரோதமாக 18 கணக்குகளுக்கு மாற்றி உள்ளனர்.
தற்கொலை செய்து கொண்ட, ஆணையத்தின் அதிகாரி சந்திரசேகரின் மனைவி, போலீசாரிடம் அளித்த புகாரில், 'என் கணவரின் தற்கொலைக்கு, வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த, சட்டவிரோத பண பரிமாற்றம், நிர்வாக இயக்குனர் பத்மநாபா காரணம்' என விவரித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.