நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி
நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி
நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி
ADDED : ஜூலை 08, 2024 01:09 PM

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் 45 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவுடன் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி பெற்றது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன். இவரை, சட்ட விரோத பண பரிவர்த்தனை நடந்ததாக கூறி, அமலாக்கத் துறை ஜனவரி மாதம் கைது செய்தது. இதையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்தார். சம்பய் சோரனை முதல்வராக்க ஏற்பாடு செய்துவிட்டு, சிறைக்கு சென்றார். ஐந்து மாதம் சிறையில் இருந்த அவருக்கு இப்போது தான் ஜாமின் கிடைத்தது. ஜூன் 28ல் வெளியே வந்தார்.
ஜார்க்கண்ட் சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. ஹேமந்த் சோரன் தலைமையில் அதை எதிர்கொள்ள இண்டியா அணி விரும்புகிறது. கடந்த ஜூலை 4ம் தேதி மீண்டும் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில், இன்று(ஜூலை 08) சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் 45 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவுடன் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி பெற்றது.