கெட்டுப்போன பிரியாணியால் புனே ஏர்போர்ட்டில் களேபரம்
கெட்டுப்போன பிரியாணியால் புனே ஏர்போர்ட்டில் களேபரம்
கெட்டுப்போன பிரியாணியால் புனே ஏர்போர்ட்டில் களேபரம்
ADDED : ஜூன் 19, 2025 12:14 AM

புனே: மஹாராஷ்டிராவின் புனே விமான நிலையத்தில், 'ஸ்பைஸ்ஜெட்' விமான பயணியருக்கு வழங்கப்பட்ட பிரியாணி கெட்டுப்போய் இருந்ததால், அதை சாப்பிடும்படி ஊழியர் ஒருவரை, பயணியர் கட்டாயப்படுத்தும் 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சில தினங்களுக்கு முன் புனே விமான நிலையத்தில் இருந்து, ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் காத்திருந்த பயணியரை சமாதானப்படுத்த, அந்நிறுவனம் சார்பில் பிரியாணி வழங்கப்பட்டது. ஆனால், பிரியாணி கெட்டுப்போய் இருப்பதாக பயணியர் குற்றஞ்சாட்டினர்.
ஏற்கனவே விமானம் தாமதத்தால் ஆத்திரத்தில் இருந்த பயணியர், ஸ்பைஸ்ஜெட் ஊழியரை சூழ்ந்து வாக்குவாதம் செய்தனர். தங்கள் கண் முன்னே அந்த பிரியாணியை சாப்பிடும்படி கட்டாயப்படுத்தினர். இது போன்ற மோசமான உணவை சாப்பிட்ட, நாங்கள் என்ன நாய்களா? என்று கடுமையாக பேசினர்.
அந்த ஊழியர் உணவை சாப்பிட்டுவிட்டு நன்றாக இருப்பதாக கூறியதால், ஆவேசம் அடைந்த பயணியர் கடும் வார்த்தைகளால் திட்டினர். இதற்கு, ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதில், 'வீடியோ தொடர்பாக கூறப்படும் கூற்றுகளை நாங்கள் முற்றிலும் மறுக்கிறோம். வழங்கப்பட்ட உணவு புதியதாகவும், நல்ல தரமாகவும் இருந்தது. பல விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலைய முனையங்களுக்கு பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளை வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரிடமிருந்தே உணவு பெறப்பட்டது.
'வார்த்தை துஷ்பிரயோகம் மற்றும் தேவையற்ற நடத்தையை எதிர்கொண்ட போதிலும், எங்கள் ஊழியர்கள் மரியாதையுடன் நடந்து கொண்டனர். பயணியரின் மோசமான நடத்தையை நாங்கள் கண்டிக்கிறோம்; மேலும் எங்கள் ஊழியர்களுக்கு ஆதரவாக உறுதியாக நிற்கிறோம்' என கூறியுள்ளது.