/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ 500 ஏக்கர் பரப்பில் நுண்ணீர் பாசனம் செங்கை மாவட்டத்தில் இலக்கு நிர்ணயம் 500 ஏக்கர் பரப்பில் நுண்ணீர் பாசனம் செங்கை மாவட்டத்தில் இலக்கு நிர்ணயம்
500 ஏக்கர் பரப்பில் நுண்ணீர் பாசனம் செங்கை மாவட்டத்தில் இலக்கு நிர்ணயம்
500 ஏக்கர் பரப்பில் நுண்ணீர் பாசனம் செங்கை மாவட்டத்தில் இலக்கு நிர்ணயம்
500 ஏக்கர் பரப்பில் நுண்ணீர் பாசனம் செங்கை மாவட்டத்தில் இலக்கு நிர்ணயம்
ADDED : செப் 26, 2025 03:37 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், 500 ஏக்கர் பரப்பில் நுண்ணீர் பாசனம் அமைக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நுண்ணீர் பாசன மானிய திட்டத்தின் பயன் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன.
இந்த தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஏரி, கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகள் பாசனம் மூலமாக விவசாய நிலங்களில் நெற்பயிர் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
இந்நிலையில், கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க, நுண்ணீர் பாசனம் மூலமாக விவசாயம் செய்யலாம். இதற்கு, பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலமாக மானியம் வழங்கப்படுகிறது.
அதன்படி, 2025 - 26ம் நிதியாண்டில், பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலமாக, மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பில் நுண்ணீர் பாசனம் அமைக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 3.31 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில், ஆதிதிராவிடர் பிரிவினருக்கு, 375 ஏக்கர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில், 5 ஏக்கர் பரப்பளவு வரையுள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் அமைப்பதற்கு, 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
மற்ற பாசன முறைகளைக் காட்டிலும், நுண்ணீர் பாசனத்தில் அதிக அளவில் நீர் சேமிக்கப்படுகிறது. பயிரிடப்பட்டுள்ள பரப்பளவில், 30 முதல் 40 சதவீதம் மட்டுமே பாசனம் பெறுவதன் மூலமாக, வாய்க்கால் வழி நீர் விரயம் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.
நுண்ணீர் பாசன நீர், 50 முதல் 60 சதவீதம் வரை சேமிக்கப்படுகிறது. இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால், நீர் பயன்பாட்டு திறன் அதிகரித்து, உர பயன்பாட்டில் சிக்கனம் ஏற்படும்.
களை வளர்ச்சி மற்றும் பூச்சி தாக்குதல் குறைவாக உள்ளதாக அறியப்பட்டுள்ளது.
நுண்ணீர் பாசனம் செய்யப்படுவதால், சமமற்ற நிலத்திலும் சீராக நீர் பாய்ச்சப்படுகிறது. விவசாயிகள் அனைவரும் இந்த பாசனத்தின் பயன்களை அறிந்து, தங்கள் விளைநிலங்களில், இத்திட்டத்தில் பயன் பெற, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு, நுண்ணீர் பாசனம் அமைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.