/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆனந்தமும் அமைதியும் நிறைந்த நவராத்திரி! ஆனந்தமும் அமைதியும் நிறைந்த நவராத்திரி!
ஆனந்தமும் அமைதியும் நிறைந்த நவராத்திரி!
ஆனந்தமும் அமைதியும் நிறைந்த நவராத்திரி!
ஆனந்தமும் அமைதியும் நிறைந்த நவராத்திரி!
ADDED : செப் 26, 2025 05:29 AM

கோவை; நவராத்திரி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, 'தினமலர்' நாளிதழ் சார்பில், கணபதி மற்றும் ரத்தினபுரி சுற்றுவட்டார பகுதிகளில் கொலு விசிட் நேற்று நடந்தது.
ஒவ்வொரு வீட்டிலும் விதவிதமான கொலு பொம்மை செட்டுகளை வைத்து நவராத்திரி கொலுவை வாசகியர் அமர்க்களப்படுத்தி இருந்தனர். தாத்தா, பாட்டி காலத்தில் வைத்த பழமையான பொம்மைகளும், புதிதாக வாங்கிய பொம்மைகளும் இடம் பெற்றிருந்தன.
ஒவ்வொரு பொம்மைக்கும் பின்புள்ள கதைகள், சாஸ்திர சம்பிரதாயங்கள் மற்றும் வழிபாட்டு பலன்கள் பற்றி, வாசகியர் விளக்கினர்.
ரமா வெங்கட், டாடாபாத்: நவராத்திரி கொலு வைப்பது எங்கள் குடும்பத்தில் பாரம்பரியமாக இருந்து வருகிறது. ஒன்பது நாட்கள் கொலு வைத்து வழிபட்டால், வருடம் முழுவதும் சுபிட்ஷமாக இருக்கும்.
இந்த வருஷம் இடும்பன் காவடி துாக்கி வரும் சிலையை வைத்திருக்கிறேன். பழனிக்கு பக்தர்கள் காவடி துாக்கும் பழக்கம் எப்படி வந்தது என்றால், இடும்பன் சக்தி மலையையும், சிவன் மலையையும் இருபுறமும் காவடியாக கட்டி துாக்கிக் கொண்டு வரும்போது பாரம் தாங்காமல் இறக்கி வைத்தார்.அதுவே, இன்றைக்கு பழனி மலையாகவும், இடும்பன் மலையாகவும் இருந்து வருகிறது. அந்த ஐதீகத்தின் படியே இன்றைக்கு பக்தர்கள் பழனிக்கு காவடி எடுத்துச் செல்கின்றனர்.
சுந்தர், சிவானந்தா காலனி: நவராத்திரியை பொ றுத்தவரை எங்களுக்கு ஒன்பது நாள் திருவிழா. காலையும், மாலையும் பூஜை இருக்கும். நண்பர்கள், உறவினர்கள் வீட்டுக்கு வருவார்கள். வீட்டில் எப்போதும் சந்தோஷமும் கலகலப்பும் நிறைந்திருக்கும்.
ஷோபிகா, கண்ணப்பன் நகர்: நாங்கள், 20 வருஷமாக கொலு வைக்கிறோம். தீபாவளி, பொங்கல் பண்டிக்கை போல் நவராத்திரி பண்டிகையையும் சிறப்பாக கொண்டாடுவோம்.
மற்ற பண்டிகைகள் ஒருநாள் அல்லது இரண்டு நாளில் முடிந்து விடும். இது, ஒன்பது நாட்களும் சிறப்பாக இருக்கும்.
சுகிர்தா வாசன், தயிர் இட்டேரி ரோடு, கண்ணப்பன் நகர்: நவராத்திரி கொலுவை 60 ஆண்டுக ளாக வைத்து வழிபடுகிறோம். வேறெங்கும் இல்லாத மரப்பாச்சி பொம்மை செட் எங்கள் வீட்டில் உள்ளது. கல்யாணத்தில் பெண்ணுக்கு சீர் கொடுக்கும்போது மரப்பாச்சி பொம்மையும் கொடுப்பது வழக்கம். எனது பாட்டி, மாமியார், அம்மா, நான் மற்றும் மகள், மருமகள் சீர் கொண்டு வந்த மரப்பாச்சி பொம்மைகள் இந்த கொலுவில் வைத்திருக்கிறோம்.
பிரேமா, ஜவகர் வீதி: புரட்டாசி புனிதமான மாதம் என்பார்கள். நவரத்திரி கொலு வைத்தால் நல்ல காரியங்கள் நடக்கும், செல்வம் பெருகும் என்பது ஐதீகம். அதனால், 15 வருஷமாக கொலு வைத்து வருகிறேன். வீட்டில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறைந்து இருக்கிறது.
பவித்ரா, ரத்தினபுரி: எங்களது பாட்டி காலத்தில் இருந்து, 65 வருஷமாக கொலு வைக்கிறோம். தினமும் மாலையில் பூஜை நடக்கும். உறவினர்களை போன் செய்து வர வைப்போம். நண்பனை பூஜைக்கு அழைப்போம். நவராத்திரி கொலு முடியும் வரை எங்கள் வீடு கோயில் மாதிரி இருக்கும். ஆனந்தமும் அமைதியும் நிறைந்து இருக்கும்.
இணைந்து வழங்குவோர்: நவராத்திரி கொலு விழா கொண்டாட்டத்தை 'தினமலர்' நாளிதழுடன் மெடிமிக்ஸ், மேளம், ரெஜூ ஆயூர், லயா காபி ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.