ADDED : ஜூன் 16, 2024 06:25 AM

சிதம்பரம்: சிதம்பரம், தாயம்மாள் நகர் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட நகர் பகுதிகளில் படுமோசமான சாலைகளால் பொதுமக்கள் பெரிதும் அவதயைடைந்து வருகின்றனர்.
சிதம்பரம் நகரத்தையொட்டி, சி.தண்டேஸ்வநல்லுார் ஊராட்சிக்குட்பட்ட தாயம்மாள் நகர், செல்வணபதி நகர், சரஸ்வதியம்மாள் நகர், ஜெகதாம்பாள் நகர், வாசாம்பாள் நகர் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட நகர் பகுதிகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பல நகர்பகுதிக்கு செல்லும், முக்கிய சாலையாக தாயம்மாள் நகர் சாலை உள்ளது. மழையால், இப்பகுதி முற்றிலும் தண்ணீர் சூழ்ந்து பாதிக்கப்படுகிறது. ஆகவே வடிகாலுடன் சாலை அமைக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு எம்.எல்.ஏ., தொகுதி நிதி ஒதுக்கீட்டில் சுமார் 1 கிலோ மீட்டர் சாலைகள் போடப்பட்டது.
அச்சாலைகள், போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் மாறிப்போனது, பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டுகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள், கலெக்டர் மற்றும் குமராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் இதுவரை சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் நகர் நல சங்கம் சார்பில், வரும் மழை காலத்திற்குள்ளாவது, இப்பகுதியில் சாலை அமைக்க, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.