ADDED : செப் 26, 2025 03:44 AM
மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லுாரியின் மைய வளாகம், சத்திரப்பட்டியில் உள்ள கூடுதல் வளாகத்தில் முதுகலை விலங்கியல் ஆராய்ச்சி துறை சார்பில் பட்டாம்பூச்சி கணக்கெடுப்பு நடந்தது.
மதுரை வனப்பகுதியின் பல இடங்களில் பட்டாம்பூச்சிகள் ஆராயப்படுகின்றன. சிறுமலை, கிளுவமலை, கரந்தைமலை, அழகர்மலை முக்கிய இடமாக உள்ளன. 2007 முதல் பட்டாம்பூச்சி ஆய்வில் ஈடுபட்டு வரும் இத்துறை 2014ல் கல்லுாரி வளாகத்தில் பட்டாம்பூச்சி பூங்காவை நிறுவியது.
இந்தாண்டு கணக்கெடுப்பில் 36 வகை பட்டாம்பூச்சிகள் பதிவாகின. கடந்த ஆண்டுகளைவிட எண்ணிக்கை குறைந்திருந்தாலும், கிலீர் விங், நவாப் நீலன், நீலமயில் அழகன், பொன்னழகன் முதல்முறையாக காணப்பட்டன. பட்டை அரளி விரும்பி, கருநீல புலி அதிகளவில் இருந்தன. காட்டுப்பட்டாம்பூச்சிகள் செந்நீலன், கர்வாலி நீலன் நகரப்பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விலங்கியல், கணிதம், இயற்பியல் துறைகள் இணைந்து பட்டாம்பூச்சி இறக்கையின் வடிவம், நிறமிகள், மூலக்கூறுகள், ஒளி வெளிப்பாடுகள், வானிலை சார்ந்த தொடர்புகள் குறித்து பேராசிரியர்கள் ஸ்டீபன் இன்பநாதன், ஷேரன் ரூபிணி, ஜாய் ஷர்மிளா தலைமையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. கணக்கெடுப்பு நிகழ்வை பேராசிரியர்கள் வெள்ளதுரை, சிவரூபன், ஸ்டெல்லாமேரி ஒருங்கிணைத்தனர்.