/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பணிகளை ஆவணப்படுத்தினால் திறம்பட செயல்படுத்தலாம் பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல் பணிகளை ஆவணப்படுத்தினால் திறம்பட செயல்படுத்தலாம் பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்
பணிகளை ஆவணப்படுத்தினால் திறம்பட செயல்படுத்தலாம் பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்
பணிகளை ஆவணப்படுத்தினால் திறம்பட செயல்படுத்தலாம் பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்
பணிகளை ஆவணப்படுத்தினால் திறம்பட செயல்படுத்தலாம் பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்
ADDED : செப் 26, 2025 02:22 AM
ஓமலுார் ''அனைத்து மட்டத்தில் பணிபுரிவோர், தங்கள் பணிகளை ஆவணப்படுத்த வேண்டும். இதன்மூலம் சிறு பகுதியில் செயல்படுத்தப்படும் பணியை, மற்ற பகுதிக்கு கொண்டு செல்லவும், சுகாதாரத்துறை பணிகளை மேலும் திறம்பட செயல்படுத்தவும் வாய்ப்பாக அமையும்,'' என, பொது சுகாதாரத்துறை இயக்குனர் சோமசுந்தரம் பேசினார்.
தமிழக பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்கம் சார்பில், 4வது சர்வதேச பொது சுகாதார மாநாடு, சேலம் பெரியார் பல்கலையில் நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் மாநாட்டை, பொது சுகாதாரத்துறை இயக்குனர் சோமசுந்தரம் தொடங்கி வைத்து பேசியதாவது:
பொது சுகாதாரத்துறை பணி, மக்கள் இடையே மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. களத்தில் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை உடனுக்குடன் வழங்குகிறது. தமிழக மக்கள் தொகையில், 14 சதவீதம் பேர் வயதானவர்கள் உள்ளனர். கிராமப்புறங்களில் அவர்களுக்கு தேவையான சிகிச்சைக்கு, முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது. அதனால், 'மக்களை தேடி மருத்துவம்' திட்டம், வரவேற்பை பெற்றுள்ளது. அதற்கு உங்கள் உழைப்பு மிக முக்கியமானது.
இத்துறையில் அனைத்து மட்டத்தில் பணிபுரிவோர், தங்கள் பணிகளை ஆவணப்படுத்த வேண்டும். இதன்மூலம் சிறு பகுதியில் செயல்படுத்தப்படும் பணி, மற்ற பகுதிக்கு கொண்டு செல்லவும், சுகாதாரத்துறை பணிகளை மேலும் திறம்பட செயல்படுத்தவும் வாய்ப்பாக அமையும். மேலும் கிராமங்களில் பணிபுரியும் மருத்துவர்கள், மக்களிடம் நன்கு பேசினால் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும். இந்த மாநாட்டில், பேரிடர் மற்றும் பல்வேறு சூழலின்போது, தங்கள் பணியில் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்தல் மூலம், மேலும் மக்களுக்கு சிறப்பான பணி செய்ய முடியும். கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் குறித்து, இந்த மாநாட்டில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. 235 பேப்பர் பிரஷன்டேசன் வந்துள்ளன. 2,550 பேர் பதிவு செய்துள்ளனர். பல்துறை நிபுணர்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூடுதல் இயக்குனர்கள் சம்பத், நாகராணி, விஜயலட்சுமி, சேலம் மாவட்ட சுகாதார அலுவலர் சவுண்டம்மாள், ஆத்துார் மாவட்ட சுகாதார அலுவலர் யோகானந்த், வட்டார மருத்துவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிறைவு நாளில், அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்க உள்ளார்.