ADDED : ஜூலை 29, 2024 10:52 PM

திருப்புத்துார் : அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி தலைமைச்செயலகம் என்ற பெயரில் ஊராட்சிகளின் நிர்வாக வசதிக்காக புதிய அலுவலககட்டடம் கட்ட முதல்வர் திட்டமிட்டுள்ளாக அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
திருப்புத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். திருப்புத்துாரில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். உதவி இயக்குநர் (ஊராட்சி) கேசவதாசன், மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன்முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழுத் தலைவர் சண்முகவடிவேல் வரவேற்றார்.
அமைச்சர் பெரியகருப்பன் குத்து விளக்கு ஏற்றி பேசியதாவது:
திட்டங்களை அறிவித்து செயல் வடிவம் கொடுத்து அவற்றை உரிய காலத்தில் மக்களிடம் சேர்க்க வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியதன் பேரில் இக்கட்டடம் ஒன்றரை ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.திருப்புத்துார் மட்டுமின்றி சிங்கம்புணரி, மானாமதுரை, திருப்புவனம், கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியங்களில் புதிய அலுவலகக் கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்துள்ளார்.
நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது முதல்வர், ஊராட்சி தலைமைச் செயலகம் அமைத்து, அதில் ஊராட்சி அலுவலகம், தலைவருக்கு தனி அறை, வி.ஏ.ஓ., ரேஷன் கடை என பல வசதிகளுடன் அமைத்து பொதுமக்கள் அரசு பணிகளை ஒரே இடத்தில் பெற அறிவுறுத்தினார். அதற்கான ஊராட்சி அளவிலான கட்டட வடிவம் திட்டமிடப்பட்டது என்றார்.
ஆணையர்கள் சத்தியன்,சோமதாஸ், துணைத் தலைவர் மீனாள் வெள்ளைச்சாமி, கவுன்சிலர்கள்கருப்பையா, கலைமாமணி, ராமசாமி, பழனியப்பன், சுமதி, ஜெயபாரதி, கலைமகள், பாக்கியலெட்சுமி, சகாதேவன், ராமேஸ்வரி பங்கேற்றனர்.