Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருப்புவனம் அருகே பானைஓடு; அகழாய்வு செய்ய வலியுறுத்தல்

திருப்புவனம் அருகே பானைஓடு; அகழாய்வு செய்ய வலியுறுத்தல்

திருப்புவனம் அருகே பானைஓடு; அகழாய்வு செய்ய வலியுறுத்தல்

திருப்புவனம் அருகே பானைஓடு; அகழாய்வு செய்ய வலியுறுத்தல்

ADDED : ஜூலை 30, 2024 05:39 AM


Google News
Latest Tamil News
பழையனுார் : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பழையனுார் அருகே பிரான்குளம் கிராமத்தில் பண்டைய கால மக்கள் பயன்படுத்திய ரெளலட்டட் வகை பானை ஓடுகள், குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள் கிடைத்திருப்பதால் அகழாய்வு மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது.

நதிக்கரை நாகரீகம் குறித்து மத்திய தொல்லியல் துறை வைகையை ஒட்டி நடத்திய அகழாய்வில் இரண்டாயிரத்து 600 ஆண்டுகளுக்கு முந்தைய மக்களின் வாழ்விடம், பயன்படுத்திய பொருட்கள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன. தொடர்ச்சியாக தமிழக தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் பழையனுார் அருகே பிரான்குளம் கிராமத்தில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்காக குழி தோண்டிய போது ஏராளமான பானை ஓடுகள் கிடைத்துள்ளன. வித்தியாசமான வடிவமைப்பில் இருந்த பானை ஓடுகளை அதே ஊரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் சேகரித்து சிவகங்கை கலெக்டர் ஆஷாஅஜித்தை சந்தித்து பிரான்குளத்தில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ராமகிருஷ்ணன் கூறியது: பிரான்குளத்தில் தலைப்பகுதி மட்டும் வெளியில் தெரியும் விநாயகர் சிலையையும் கிராமமக்கள் இன்றளவும் வழிபட்டு வருகின்றனர். ஆறரை அடிக்கும் அதிக உயரம் கொண்ட இந்த விநாயகர் சிலை பண்டைய காலத்தைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. பானை ஓடுகளில் பல வித்தியாசமாக உள்ளது. முற்றிலும் கருப்பு நிறத்திலும், கருப்பு சிவப்பு என இரு வண்ணத்திலும், கழுத்து பகுதி உட்புறம் மடிக்கப்பட்ட நிலையில் உள்ள பானை ஒடும் கிடைத்துள்ளன.

வைகை நதிக்கரை நாகரீகம் போல கிருதுமால் நதியை ஒட்டியும் பண்டைய காலத்தில் மக்கள் வாழ்ந்திருக்க கூடும், எனவே கிருதுமால் நதி கரையில் அமைந்துள்ள பிரான்குளத்திலும் அகழாய்வு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us