/உள்ளூர் செய்திகள்/தேனி/பல ஆயிரம் மலைமாடுகளின் தீவன பிரச்னைக்கு தீர்வு காணுங்கள்; மேய்ச்சல் நிலங்களில் தீவன புல் வளர்க்க வலியுறுத்தல்பல ஆயிரம் மலைமாடுகளின் தீவன பிரச்னைக்கு தீர்வு காணுங்கள்; மேய்ச்சல் நிலங்களில் தீவன புல் வளர்க்க வலியுறுத்தல்
பல ஆயிரம் மலைமாடுகளின் தீவன பிரச்னைக்கு தீர்வு காணுங்கள்; மேய்ச்சல் நிலங்களில் தீவன புல் வளர்க்க வலியுறுத்தல்
பல ஆயிரம் மலைமாடுகளின் தீவன பிரச்னைக்கு தீர்வு காணுங்கள்; மேய்ச்சல் நிலங்களில் தீவன புல் வளர்க்க வலியுறுத்தல்
பல ஆயிரம் மலைமாடுகளின் தீவன பிரச்னைக்கு தீர்வு காணுங்கள்; மேய்ச்சல் நிலங்களில் தீவன புல் வளர்க்க வலியுறுத்தல்
ADDED : செப் 24, 2025 06:27 AM

கம்பம் : மாவட்டத்தில் உள்ள பல ஆயிரம் மலைமாடுகளை மேய்ச்சலுக்கு வனத்துறை தொடர்ந்து அனுமதிக்க மறுப்பதால் அவைகளின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. மலைமாடுகளின் தீவனத்திற்கு மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களில் தீவன புல் வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்திட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். தேனி மாவட்டத்தில் ஒவ்வொரு மலையோர கிராமங்களில் குறைந்தது ஆயிரம் மலைமாடுகள் வளர்க்கப்படுகின்றன. இங்கு பல ஆயிரம் மலைமாடுகள் உள்ளன, மலைமாடுகள் தீவனப் பிரச்னையில் சிக்கி தவித்து வருகின்றன. மேகமலை புலிகள் காப்பகமாக மாறிய பின் வனப்பகுதியில் மாடுகள் மேய்ச்சலுக்கு செல்ல வனத்துறை அனுமதி மறுத்து வருகிறது . 2006 வரை வனத்துறையினர் மேய்ச்சலுக்கு அனுமதி சீட்டு வழங்கி வனப்பகுதிகளில் மாடுகளை அனுமதித்தனர். 2020 க்கு பின் அனுமதி மறுக்கப்பட்டது. இந்த பிரச்னைக்காக மலைமாடுகள் வளர்ப்போர் பலபோராட்டங்கள் நடத்தியும், மனுக்கள் கொடுத்தும் இன்று வரை பலனில்லை.
இது குறித்து சின்ன ஒவுலாபுரம் மலைமாடுகள் வளர்ப்பவர்கள் கூறுகையில், 'மலைமாடுகளின் தீவன பிரச்னை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இப் பிரச்னையால் மாடுகள் வளர்க்க முடியாத நிலை உருவாகி உள்ளது. வனத்துறையினர் வரைமுறைகளை ஏற்படுத்தி குறிப்பிட்ட சில பகுதிகளில் மேய்ச்சலுக்கு அனுமதிக்க வேண்டும்,'என்றனர்.
செயல்வடிவம் பெறாத திட்டம் சில ஆண்டுகளுக்கு முன்பு மலைமாடுகள் தீவன பிரச்னையை தீர்க்க, போடி மற்றும் கோட்டூர் பகுதியில் கால்நடை துறைக்கு சொந்தமான மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களை கண்டறிந்து அதில் தீவனம் வளர்க்கும் திட்டம் செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்னெடுத்தது. ஆனால் அந்த திட்டம் செயல்வடிவம் பெறவில்லை. எனவே மலைமாடுகளின் தீவன பிரச்னை இன்னமும் தீர்ந்த பாடில்லை.
தேனி கால்நடை பல்கலை நாட்டு மாடுகளை பாதுகாக்கவும், அங்கீகாரம் பெற்றுத்தரவும் முயற்சி செய்கிறது. ஆனால் மலைமாடுகளின் வாழ்வாதார பிரச்னையான தீவன பிரச்னைக்கு தீர்வு காண இயலாத சூழல் நிலவுகிறது. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பது போல் மாடுகள் இருந்தால் தான் பல்கலை உருவாக்கியதற்கு மக்களுக்கு பயன் கிடைக்கும். எனவே தீவன பிரச்னையில் கால்நடை பல்கலை, கால்நடைத்துறை, வனத்துறையினர் கலந்து ஆலோசித்து தீவன பிரச்னை தீர்க்க வேண்டும். மேய்ச்சல் நிலங்களை கண்டறிந்து அதற்கென செயல்திட்டங்களை வகுத்து தீவன உற்பத்தி திட்டம் செயல்படுத்திட வேண்டும் என கால்நடை வளர்ப்போர் கோரியுள்ளனர்.