ADDED : செப் 25, 2025 12:25 AM
குடிநீர் விநியோகம் தடை
திருப்பூர் மாநகராட்சி பகுதியில், நான்காவது குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்சமயம், மேட்டுப்பாளையம் காரமடை பிரிவு, நால் ரோட்டில், நான்காவது குடிநீர் திட்டத்தில், குழாய் உடைந்து சரி செய்யும் பணி நடக்கிறது. எனவே, நேற்று முதல் வரும், 26ம் தேதி வரை இத்திட்டத்தின் வாயிலாக பெறப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்த வேண்டும் என, மாநகராட்சி கமிஷனர் அறிவித்துள்ளார்.
தேங்காய் பருப்பு ஏலம்
வெள்ளகோவிலில் நடந்த ஏலத்தில், 76 லட்சம் ரூபாய்க்கு தேங்காய் பருப்பு விற்பனையானது. வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள், 77 பேர், 36 ஆயிரம் கிலோ எடை கொண்ட தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்தனர். முதல் தரம் ஒரு கிலோ, 230.68 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ 156.49 ரூபாய்க்கும் ஏலம் நடந்தது. மொத்தம், 76 லட்சத்து, 61 ஆயிரம் ரூபாய்க்கும் வர்த்தகம் நடந்தது.
பனியன் நிறுவனத்துக்கு அபராதம்
திருப்பூர் மாநகராட்சி, கமிஷனர் அமித், நேற்று வளையங்காடு, ஆசர்மில் ரோடு, அவிநாசி ரோடு ஆகிய பகுதிகளில் குப்பை சரியாக அள்ளப்படுகிறதா, துப்புரவு பணியாளர்கள் சரியாக பணிக்கு வருகிறார்களா என ஆய்வு மேற்கொண்டார். அதில், 23 வது வார்டு, ஆசர் மில் ரோட்டோரத்தில் பனியன் நிறுவனத்தினர் குப்பை வீசியிருந்தனர். இது குறித்து விசாரித்த கமிஷனர், குப்பை வீசி சென்ற வளையங்காட்டில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்துக்ககு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.
இலவச மருத்துவ முகாம்
திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் வாசன் ஐ கேர் மருத்துவமனை சார்பில், மாநகராட்சி அலுவலகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. துாய்மை பணியாளர்கள், அலுவலர்கள் பங்கேற்று, கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. சிலர், உயர் சிகிச்சைக்கு பலர் பரிந்துரை செய்யப்பட்டனர். அலுவலகத்துக்கு பல்வேறு பணி தொடர்பாக வந்த பொதுமக்களும், கண் பரிசோதனை முகாமில் பங்கேற்றனர். முகாமில், நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்று பயன்பெற்றனர்.
துாய்மை பணிக்கு வாகனங்கள்
துாய்மையே சேவை திட்டத்தின் கீழ், துாய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டத்தின் மூலம், மாநகராட்சி பணிகளுக்காக கழிவுநீர் அகற்றும் புதிய, இரண்டு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் அமித் தலைமையில், துணை மேயர் பாலசுப்ரமணியம், துணை கமிஷனர்கள் மகேஸ்வரி, சுந்தரராஜன், மூன்றாவது மண்டல தலைவர் கோவிந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, 3வது மண்டலத்தில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கும் பணி, பிச்சம்பாளையத்தில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களின் வருகை பதிவேடு ஆகியவற்றை கமிஷனர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காஸ் கசிவால் தீ விபத்து
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில், கனகமணி 65, என்பவர் வசித்து வருகிறார். வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது காஸ் கசிவால், கனகமணி அணிந்திருந்த சேலையில் தீ பிடித்தது. இதனால், அவர் சத்தம் போடவே, அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவிநாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து சிறு தீக்காயங்களுடன் தவித்த கனகமணியை மீட்டு, அவிநாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில், கனகமணி 65, என்பவர் வசித்து வருகிறார். வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது காஸ் கசிவால், கனகமணி அணிந்திருந்த சேலையில் தீ பிடித்தது. இதனால், அவர் சத்தம் போடவே, அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவிநாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து சிறு தீக்காயங்களுடன் தவித்த கனகமணியை மீட்டு, அவிநாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.