மக்காச்சோள சாகுபடியை ஊக்குவிக்க ரூ.30 கோடியில் சிறப்பு திட்டம் அறிவிப்பு
மக்காச்சோள சாகுபடியை ஊக்குவிக்க ரூ.30 கோடியில் சிறப்பு திட்டம் அறிவிப்பு
மக்காச்சோள சாகுபடியை ஊக்குவிக்க ரூ.30 கோடியில் சிறப்பு திட்டம் அறிவிப்பு
ADDED : ஜூன் 23, 2024 06:37 AM
சென்னை : ''தமிழகத்தில் மக்காச்சோள சாகுபடியை ஊக்குவிப்பதற்கான சிறப்பு திட்டம், 18 மாவட்டங்களில், 30 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்,'' என, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்தார்.
சட்டசபையில், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
l தமிழகத்தில் மக்காச்சோள சாகுபடி பரப்பு உற்பத்தியை அதிகரிக்க, நடப்பாண்டு சேலம், திருப்பூர், திண்டுக்கல், பெரம்பலுார், துாத்துக்குடி, விருதுநகர், கடலுார், கள்ளக்குறிச்சி, ஈரோடு, விழுப்புரம், நாமக்கல், தர்மபுரி, திருச்சி, அரியலுார், மதுரை, தேனி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 18 மாவட்டங்களில், மக்காச்சோள சாகுபடி சிறப்பு திட்டம், 30 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்
l வீரிய ஒட்டு மக்காச்சோள விதைகள், திரவ உயிர் உரங்கள், இயற்கை உரம், நானோ யூரியா ஆகியவற்றை உள்ளடக்கிய, 6,000 ரூபாய் மதிப்பிலான, 50,000 தொகுப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு, 1.23 லட்சம் ஏக்கர் பரப்பளவில், மக்காச்சோள சாகுபடி ஊக்குவிக்கப்படும்
l பசுமைக் குடில் மற்றும் நிழல் வலைக் குடில்கள், 10.19 கோடி ரூபாய் மானியத்தில் அமைக்கப்படும்
l ஐந்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில், 10 கோடி ரூபாயில், பாதுகாப்புக் கூடங்கள் அமைக்கப்படும்
l தமிழகத்தில் துவரை உள்ளிட்ட பிற பயறு வகைகளின் பரப்பு விரிவாக்கத்திற்கும், அவற்றின் உற்பத்தி திறனை அதிகரிக்கவும், 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
l சென்னை மாநகருக்கு காய்கறி அளிக்கக் கூடிய மாவட்டங்களில், நிழல் வலைக் குடில் அமைத்து காய்கறிகள் சாகுபடியை ஊக்குவித்து, காய்கறிகள் வரத்தை அதிகரிக்க, 4 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
l டெல்டா மாவட்டங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட குளங்களை துார் வாரி மேம்படுத்த, 3 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். 20 உழவர் சந்தைகளில் கட்டமைப்பு வசதிகள், 3 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்
l திருவண்ணாமலை மாவட்டம் கலைஞர் நுாற்றாண்டு பூங்கா, சென்னை செம்மொழிப் பூங்கா, ராமநாதபுரம் மாவட்டம் பாலை மரபணுப் பூங்கா ஆகியவற்றில், 1.22 கோடி ரூபாயில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்
l அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில், அலங்கார மலர் செடிகள், அலங்கார தாவரங்களின் நாற்றுகளை உற்பத்தி செய்து வழங்க, ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
l காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, நான்கு அரசு தோட்டக்கலைப் பண்ணைகளின் கட்டமைப்பு வசதிகள், 25 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்
l டிராகன் பழம் உற்பத்தி பரப்பை அதிகரிக்க, கிருஷ்ணகிரி மாவட்டம், ஜீனுார் அரசு தோட்டக்கலைப் பண்ணையில், டிராகன் பழத்திற்கான செயல் விளக்க திடல், 25 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்
l களான் வளர்ப்பு வேளாண் செயல்பாடாக அறிவிக்கப்படும்
l வேளாண்மை பொறியியல் தொடர்பான அரசு திட்டங்களின் சிறப்பம்சங்களை, விவசாயிகளுக்கு கொண்டு செல்ல, 388 ஊராட்சி ஒன்றியங்களிலும், விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும்
l அனைத்து மாவட்டங்களிலும், ஏற்றுமதி ஆலோசனை மையங்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.