'சட்ட ரீதியான உத்தரவுகளை அவமதிப்பது ஏற்புடையதல்ல'
'சட்ட ரீதியான உத்தரவுகளை அவமதிப்பது ஏற்புடையதல்ல'
'சட்ட ரீதியான உத்தரவுகளை அவமதிப்பது ஏற்புடையதல்ல'
ADDED : ஜூலை 01, 2024 02:50 AM

சென்னை: 'தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரிய ஆவணங்களை வழங்காமல், சட்ட ரீதியான உத்தரவுகளை தொடர்ந்து அவமதித்தது ஏற்புடையது அல்ல' என்று தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், செஞ்சி தாசில்தார் அலுவலகத்தில் ஆவணங்கள் மாயமானது குறித்து, மாவட்ட வருவாய் அதிகாரி சிறப்பு விசாரணை நடத்தவும் உத்தரவிட்டு உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா பெரியாமூரில், பச்சையப்பனின் தாய்க்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் உள்ளது. நிலத்துக்கு கூட்டு பட்டா உள்ளது. திடீரென அதில், 96 சென்ட் நிலம் புகழேந்தி என்பவரின் பெயருக்கு மாறியது தெரிய வந்தது.
இது குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விபரம் கோரி பச்சையப்பன், செஞ்சி துணை தாசில்தாருக்கு 2021 நவ., 7ல் விண்ணப்பித்தார். உரிய பதில் இல்லாததால், செஞ்சி தாசில்தாரிடம் முறையீடு செய்தார். அதிலும் நடவடிக்கை எடுக்கப்படாததால், மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார்.
அதை விசாரித்த மாநில தகவல் ஆணையம், 'மனுதாரர் கோரும் ஆவணங்களை வழங்க வேண்டும்; தவறினால் தகுந்த நடவடிக்கை எடுக்க நேரிடும்' என, செஞ்சி துணை தாசில்தாருக்கு, 2022 டிச., 8ல் உத்தரவிட்டது. இருந்தும், செஞ்சி துணை தாசில்தார், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், பச்சையப்பன் மீண்டும் மாநில தகவல் ஆணையத்தில் முறையீடு செய்தார். மனுவை விசாரித்த தகவல் ஆணையம், 2023 மே 30ல், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்; துணை தாசில்தார், 20,000 ரூபாயை நஷ்ட ஈடாக பச்சையப்பனுக்கு வழங்க வேண்டும் என, உத்தரவிட்டது.
இந்த உத்தரவை, விழுப்புரம் மாவட்ட வருவாய் அதிகாரி, செஞ்சி தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் ஆகியோர் நிறைவேற்றவில்லை எனக்கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பச்சையப்பன் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா பிறப்பித்த உத்தரவு:
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மனுதாரர் கோரிய ஆவணங்களை செஞ்சி துணை தாசில்தார் வழங்க மறுத்துள்ளார். சட்ட ரீதியான உத்தரவுகளை அவர் முற்றிலும் மதிக்காமல், தொடர்ந்து அவமதிப்பு செய்துள்ளார். அவரின் இந்த செயல்பாடு, முற்றிலும் உத்தரவுகளுக்கு கீழ்படியாத போக்கையே வெளிப்படுத்துகிறது. இது, ஏற்புடையது அல்ல.
செஞ்சி தாசில்தார் அலுவலகத்தில், ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
எனவே, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனுதாரர் கோரிய ஆவணங்களை, செஞ்சி தாசில்தார் அலுவலகம் வழங்க மறுத்துள்ளது; அந்த ஆவணங்கள் மாயமானது குறித்து, மாவட்ட வருவாய் அதிகாரி தனியாக சிறப்பு விசாரணை நடத்த வேண்டும்.
மாநில தகவல் ஆணையம் 2023ல் பிறப்பித்த உத்தரவை, உடனே மாவட்ட வருவாய் அதிகாரி அமல்படுத்த வேண்டும். இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, ஜூலை 10ல், அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.