ஆகஸ்ட் முதல் தமிழ் புதல்வன் திட்டம்: முதல்வர் ஸ்டாலின்
ஆகஸ்ட் முதல் தமிழ் புதல்வன் திட்டம்: முதல்வர் ஸ்டாலின்
ஆகஸ்ட் முதல் தமிழ் புதல்வன் திட்டம்: முதல்வர் ஸ்டாலின்
UPDATED : ஜூன் 15, 2024 04:54 PM
ADDED : ஜூன் 14, 2024 12:15 PM

சென்னை: ''உயர் கல்விக்கு செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, மாதம் 1,000 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கும், 'தமிழ்ப் புதல்வன்' திட்டம், ஆகஸ்டில் அமலுக்கு வரும்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் ஐம்பெரும் விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.
சான்றிதழ்
கடந்த கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், தமிழில் 100க்கு 100 மதிப்பெண் பெற்ற, 43 மாணவ - மாணவியர்; தேசிய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய 67வது விளையாட்டு போட்டிகளில், பதக்கம் வென்ற மாணவ - மாணவியர்; பொதுத்தேர்வுகளில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற, 1,728 பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோரை பாராட்டி, சான்றிதழ்களை முதல்வர் வழங்கினார்.
மேலும், அரசு பள்ளி களில், 455.32 கோடி ரூபாய் செலவில், 22,931 திறன்மிகு வகுப்பறைகளை துவக்கி வைத்தார். 79,723 தொடக்க கல்வி ஆசிரியர்கள் ஸ்மார்ட் வகுப்பறைகளை பயன்படுத்தும் வகையில், கையடக்க கணினிகளையும் வழங்கினார்.
பின், முதல்வர் பேசியதாவது: பள்ளி மாணவர்களுக்கு ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. காலை உணவுத் திட்டம், இல்லம் தேடிக்கல்வி, எண்ணும் எழுத்தும், மாணவர் மனசு, நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி, நடமாடும் அறிவியல் ஆய்வகம், கல்வி சுற்றுலா என, திட்டங்கள் நீளுகின்றன. அரசுப் பள்ளி மாணவியர், உயர் கல்வி படிக்கும் போது, மாதம் 1,000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தால், மாணவியர் மகிழ்ச்சியாக உள்ளனர்.
மகிழ்ச்சி
இந்த மகிழ்ச்சி மாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில், 'தமிழ்ப் புதல்வன்' திட்டம், ஆகஸ்ட் முதல் நடைமுறைக்கு வர உள்ளது. அரசுப் பள்ளி களில் படித்து, கல்லுாரியில் சேர உள்ள மாணவர்களுக்கு, இந்த உதவித்தொகை கிடைக்கும். முதல் கட்டமாக, 500 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் துவக்கப்பட்டுள்ளன. 22,931 பள்ளிகளில் இந்த வகுப்பறைகள் உருவாக்கப்பட உள்ளன.
நிதி நெருக்கடி இருந்தாலும், கல்வித் துறையில் புதுப்புது திட்டங்களை உங்களுக்காகவே துவங்குகிறோம். நீங்கள் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். படிங்க, படிங்க, படித்துக் கொண்டே இருங்கள். கல்வி எனும் நீரோடை தடங்கல் இல்லாமல் பாய்வதற்கு, உங்களுடைய இந்த அரசு முழுமையாக ஆதரவாக நிற்கும்.
படிக்காமலும் பெரிய ஆள் ஆகலாம் என்று, யாரோ ஒன்றிரண்டு பேரைப் பார்த்து, தவறான பாதையில் செல்லாமல், கல்விதான் பெருமையான அடையாளம் என, புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் கண் முன், 'புல் ஸ்டாப்' தெரியக்கூடாது; 'கமா' தான் தெரிய வேண்டும். 'கீப் ரன்னிங், கீப் வின்னிங், கீப் ஷைனிங். மேக் தமிழ்நாடு பிரவுட்' . இவ்வாறு அவர் பேசினார்.
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் வரவேற்று பேசினார். அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு, சுப்பிரமணியன், மேயர் பிரியா, எம்.பி., தயாநிதி, எம்.எல்.ஏ. பரந்தாமன், பள்ளிக்கல்வி துறை செயலர் குமரகுருபரன், பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி ஆகியோர் பங்கேற்றனர்.